அரசாங்கத்தின் இரட்டை வேடத்திற்கு சஜித் எதிர்ப்பு

135 0

வரி செலுத்த வேண்டிய மக்களிடம் இருந்து முறையாக வரியை அறவிடாது அரசாங்கம் மூன்றாவது தடவையாகவும் மின் கட்டணத்தை சட்டவிரோதமாக அதிகரித்துள்ளதாகவும், இந்த கேவலமான செயலால் இந்நாட்டு மின்சார நுகர்வோர் நிர்க்கதியாகியுள்ளனர் என்றும், மதுபான நிறுவனங்கள், சிகரெட் நிறுவனங்கள், அரச அதிகாரிகள் சிலருக்கு சந்தோச அன்பளிப்புகளை அளித்து, குறித்த ஒரு சில அரச அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்குச் செல்லும் போது நாட்டின் ஏழை மக்கள் மின்கட்டணத்தை செலுத்த முடியாமல் சோகத்தில் மூழ்கியுள்ளனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எதிர்கால ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் புகையிலை, போதைப்பொருள் மற்றும் மதுவின் பயன்பாட்டை யதார்த்தமாக குறைக்கும் அல்லது முழுமையாக இல்லாதொழிக்கும் திட்டத்தைத் முன்னெடுக்க தாம் உறுதியளிப்பதாகவும், இந்தக் கொள்கையால் வாக்குகள் குறையும் என்ற அச்சம் தனகில்லை என்றும், பொய் சொல்லாத, மக்களை ஏமாற்றும் ஊழல் அரசியல் கலாசாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பொரளை பௌத்த இளைஞர் சங்க கேட்போர் கூடத்தில் இன்று (21) நடைபெற்ற இலங்கை மதுபாவனைக்கெதிரானோர் சங்கத்தின் 111 ஆவது பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது, கிராம மட்டத்தில் வறுமையை ஒழிப்பதற்கு பதிலாக,ஆளும் கட்சி உறுப்பினர்களது கையொப்பத்துடன் பியர் உரிம பத்திரம் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், சுற்றுலாவை ஊக்குவிப்பதாக கூறிக்கொண்டு விகாரைகள், கோவில்கள், தேவாலயங்கள், பாலர் பாடசாலைகள் மற்றும் சுகாதார மையங்களுக்கு அருகில் இதுபோன்ற பியர் பார்களை திறக்க உரிமம் வழங்கப்பட்டு வருவதாகவும், இந்நாட்டை குடிகாரர்களின் சொர்க்கமாக மாற்ற முயற்சிக்கின்றனர் என்றும், எதிர்க்கட்சித் தலைவராக பார் உரிம பத்திரம் வழங்குவதற்கு நபர்களின் பெயர்களை சிபாரிசு செய்யாதது குறித்து தான் பெருமைப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

பாடசாலை கட்டமைப்பு கூட போதைப்பொருள் கடத்தலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான நிலையில், நேரடியான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்றும், இந்த அழிவைப் பார்த்துக் கொண்டு நாம் இனியும் செயலற்றிருக்க முடியாது என்றும், சின்னஞ் சிறார்களின் நலனுக்காக கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

நாட்டு மக்களின் விழிப்புணர்வை திசை திருப்பும் வகையில் புகைபிடித்தல், மதுபானம், கஞ்சா போன்றவை ஊக்குவிக்கப்படுகின்றன என்றும், இவ்வாறு, கஞ்சா போன்ற அதீத போக்குகளை ஊக்குவிக்கும் சிலர், நிதானமாக நடந்து கொண்டதை காணமுடிகிறது என்றும், நாட்டின் சிறார்கள் குறித்து அவர்கள் ஒருபோதும் சிந்திப்பதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் ஒன்றே என்று கூறினாலும், அது அப்படியல்ல என்பதை இந்த அவையில் உள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கையே நிரூபிக்கிறது என்றும், போதைப்பொருள் நுகராதவர்களே இந்த அவைக்கு வரலாம் என்ற படியால், மனசாட்சிக்கு இணங்க இது இங்கு நிரூபனமாகுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக் காட்டினார்.

மது, போதைப்பொருள், சிகரெட் போன்றவற்றின் பயன்பாடு நமது நாட்டின் கலாச்சாரத்தில் எவ்வாறு பதிந்துள்ளது என்பதைப் பார்க்கும் போது மிகவும் பரிதாபமாக உள்ளதாகவும், இதற்கு சட்ட கட்டமைப்பு மட்டுமின்றி தேவையான நடைமுறை ரீதியான ஏற்பாடுகளும் நாட்டில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், மது, போதைப்பொருள், சிகரெட் போன்றவற்றால் அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது என்று கூறினாலும், பாராளுமன்றக் குழுக்கள் மூலம் தெரிய வந்துள்ளபடி, மதுபான வர்த்தகர்கள் முறையாக செலுத்த வேண்டிய வரியைக் கூட செலுத்தவில்லை என்றும், இரண்டு நிறுவனங்களின் 17,000 இலட்சங்கள் வரியாக செலுத்த வேண்டிய தொகையை செலுத்த தவறிவிட்டன என்றும், நிதி அமைச்சு, திறைசேரி ஆகியவற்றில் கடமையாற்றும் சிறு தரப்பினர் மதுபான நிறுவனங்களுடன் முறையற்ற தொடர்பைக் கொண்டுள்ளதால் முறையாக அறவிட வேண்டிய வரியை சரியான அளவு அறவிடாதுள்ளனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இவை வாக்குகளை வெல்லும் கதைகள் அல்லாது வாக்குகளை இழக்கும் கதைகள் என்றும், வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவதை விட, நாட்டின் எதிர்கால நலனுக்காக,தகவல் மற்றும் தரவுகளின் அடிப்படையில் சரிந்துள்ள தேசத்தை சீரான முறையில் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமா இல்லையா என்பதை மனசாட்சிக்கு ஏற்ப அனைவரும் சிந்திக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இத்தகைய மாநாட்டை மாத்திரம் மையமாக வைத்து இலங்கை மதுபாவனைக்கெதிரானோர் சங்கம் நடத்தப்படாமல், நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும்,கிராமங்களிலும் தீவிரமாக செயலாற்ற வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

இலங்கை மதுபாவனைக்கெதிரானோர் சங்கத்தின் 111 ஆவது பொதுச் சபை அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டார்.

இந்த உறுப்பினர் பதவி கிடைக்காவிட்டாலும், பிறந்தது முதல் புகை,மது,போதைப் பழக்கம் இல்லாதவர் என்றும், எதிர்காலத்திலும் இது இவ்வாறே தொடரும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்வது போன்றே வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு அதனை நடைமுறைச் செயற்பாடாக மாற்றுவதே தமது நோக்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.