காவிரி விவகாரத்தில் சட்டம் மற்றும் அரசியல் ரீதியாக தைரியமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் கம்பைநல்லூர் பேரூராட்சி பகுதியில் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் இரு இடங்களில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. இவற்றை பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று (அக்.20) நடந்தது. இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினரும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் பங்கேற்று கோபுர விளக்குகளை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது, “ஒகேனக்கல் காவிரி உபரிநீர் திட்டத்தை 7 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். முந்தைய அரசும் கிடப்பில் வைத்திருந்தது. தற்போதைய அரசும் கிடப்பில் போட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுவதுடன், இளையோர் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்லும் நிலை தடுக்கப்படும். எனவே, இந்தத் திட்டத்தை முதல்வர் சிறப்பு கவனம் எடுத்து செயல்படுத்த வேண்டும். தருமபுரி சிப்காட்டில் தொழிற்சாலைகளை ஏற்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
தமிழகத்தில் நிறைய இடங்களில் நெடுஞ்சாலைகள் தரமற்றதாக அமைக்கப்படுகிறது. வந்தவாசி பகுதியில் உலக வங்கி கடன் பெற்று அமைத்த சாலையிலும் பல இடங்களில் தரமின்மை காணப்படுகிறது. அதேபோல, நெடுஞ்சாலை அமைக்கும்போது நிறைய இடங்களில் திட்டமிட்டு, ‘அண்டர் பாசிங்’ வசதிகள் அமைத்தால் விபத்து மற்றும் உயிரிழப்புகளை தடுக்க முடியும். தொப்பூர் கணவாய் பகுதியில் தொடர் விபத்து மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் சாலையை சீரமைக்க தாமதிக்கிறார்கள்.

