இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முறையாக செயற்படாத காரணத்தால் தான் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
அரசியலமைப்பு பேரவையை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஊழல் எதிர்ப்பு சட்டத்துக்கு அமைய இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவேன் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளை குறைத்து மதிப்பிடவில்லை, பேரவையின் உறுப்பினர்களை அவமதிக்கவுமில்லை. ஒருசில நியமனங்கள் தாமதப்படுத்தப்பட்டுள்ளமைக்கு மாத்திரம் அதிருப்தி தெரிவித்தேன்.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் ஊடாக அரசியலமைப்பு பேரவையின் அதிகாரங்களை பலப்படுத்த நான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன்.
அரசியலமைப்பு பேரவையின் 41 (அ) உறுப்புரையின் பிரகாரம் அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடன் ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழல் எதிர்ப்பு சட்டத்தில் ‘அரசியலமைப்பு பேரவை என்பதற்கு பதிலாக அரசியலமைப்பு சபை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தவறான மொழிப்பெயர்ப்பை திருத்திக் கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடு வங்குரோத்து நிலையடைவதற்கு ஊழல் மோசடி பிரதான காரணம் என மக்கள் அழுத்தமாக குறிப்பிடுகிறார்கள். ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முறையாக செயற்படாத காரணத்தால் தான் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
பாராளுமன்றத்தினால் ஊழலை இல்லாதொழிக்க முடியாது. ஊழலை ஒழிப்பதற்கான சட்டங்கள் இயற்றப்பட்டன. இருப்பினும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முறையாக செயற்படவில்லை.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்துக்கு அமைய இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை.
தற்போதைய உறுப்பினர்கள் பதில் உறுப்பினர்களாகவே பதவி வகிக்கிறார்கள். உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தினார்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்கள்.
ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தற்போதைய உறுப்பினர்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லதொரு அபிப்பிராயம் கிடையாது. ஆகவே ஊழல் எதிர்ப்பு சட்டத்துக்கு அமைய வெகுவிரைவில் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்றார்.

