யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம்: 2 பேருக்கு விளக்கமறியல்

302 0

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் அனுமதியின்றி ஒன்றுகூடி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 2 இளைஞர்களை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்ற ஏனையவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், முழவை சந்தியை சேர்ந்த இளைஞர்கள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 நாட்களின் முன்னர், இளைஞன் ஒருவரின் 33வது பிறந்தநாள் நிகழ்வு, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. அந்த பகுதியில் பழ வியாபாரத்தில் ஈடுபடும் இளைஞர்கள் பலரும் அதில் பங்கேற்றுள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான வீடியோக்கள் ரிக்ரொக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக ஒன்றுகூடியமை, சட்டவிரேதமாக கூட்டம் கூடியமை ஆகிய குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்களை கைது செய்ய யாழ்ப்பாணம் பொலிசார், இன்று அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.

அவர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.