இலங்கை கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு தற்போது கடற்படை பயிற்சி முகாமாக மாறியுள்ள தமது நிலத்தை மீட்டு தங்களை மீள் குடியேற்றம் செய்ய வலியுறுத்தி முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த 23 ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் நேற்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது.
முள்ளிக்குளம் பிரதான வீதியில் உள்ள முள்ளிக்களம் கிராமத்திற்குச் செல்லும் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக குறித்த கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள், ஆண்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக 2ஆவது நாளாகவும் நேற்று வெள்ளிக்கிழமை தொடர்கின்றது.
கடும் குளிர் மத்தியிலும்,விசப்பூச்சிகளின் மத்தியிலும் இரவைக் களித்துள்ளனர்.
பெண்கள், ஆண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் குறித்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை கடற்படையினர் பல்வேறு வகையில் அச்சுறுத்தி வருவதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த மக்களின் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அருட்தந்தையர்கள், மீனவ அமைப்புக்களின் பிரதி நிதிகள், வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை காலை முள்ளிக்குளம் பகுதிக்குச் சென்றனர்.
இதன் போதே கடற்படையினர் தம்மை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடற்படையினர் தம்மை தொடர்ச்சியாக புகைப்படம் எடுப்பதாகவும், கருத்துக்களை வழங்குபவர்களுடைய விபரங்களை திரட்டுவதாகவும் அந்த மக்கள் தெரிவித்தனர்.
குறித்த போராட்டத்தை உடனடியாக கைவிடாது விட்டால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என கடற்படை எச்சரிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் தெரிவித்தள்ளனர்.
கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்க மாட்டோம், போக்குவரத்து சேவைகளை இடை நிறுத்துவோம், மலங்காட்டில் உள்ள மக்களுக்கு வழங்கப்படுகின்ற குடி நீர் வசதியை நிறுத்தவோம் என பல்வேறு வகையிலும் தம்மை அச்சுறுத்துவதாக அந்த மக்கள் முiறியிட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தங்களை கடற்படை எவ்வாறு அச்சுறுத்தினாலும், தொடர்ந்தும் எமது நிலம் மீட்கப்படும் வரை போராடுவோம் என மக்கள் தெரிவித்தனர்.