முல்லைத்தீவில் பல மில்லியனில் புனரமைக்கப்படும் குளம்!

105 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையத்தின் கீழ் உள்ள குஞ்சுக்கோடாலிக்கல்லு குளத்தின் புனரமைப்பு பணிகளில் திருப்தி இல்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த குளத்தின் புனரமைப்பு பணிகள் 35 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.முல்லைத்தீவு மாவட்டத்தில் கமநல சேவை திணைக்களத்தின் கீழ் உள்ள 48 குளங்கள் உலக வங்கியின் நிதி உதவி திட்டத்தில் சியாப் திட்டத்தின் ஊடாக அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

26 குளங்கள் கமநலசேவை திணைக்களம் ஊடாகவும் 22 குளங்கள் நீர்பாசன திணைக்களம் ஊடாகவும் பரிந்துரைக்கப்பட்டு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குளங்களுக்கான தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை இல்லாத காரணத்தினால் நீர்பாசன திணைக்களத்திடம் ஆளணி வளங்கள் உள்ளதால் அவர்கள் ஊடாகவும் இந்த திட்டம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் 48 குளங்கள் பல குளங்கள் சிறப்பாக புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் குஞ்சுக்கோடலிக்கல்லி குளத்தின் அபிவிருத்தி பணிகளில் திருப்தி இல்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

குளக்கட்டு புனரமைத்தல்,வான்கட்டு பகுதி மற்றும் வால்கட்டு பகுதிகள் புனரமைத்தல் என்பன இந்த வேலைத்திட்டங்களில் உள்வாங்கப்பட்டுள்ள போதும் அபிவிருத்தி தொடர்பில் விவசாயிகளுக்கு முழுமையான தகவல்கள் எவையும் திணைக்கம் சார் உத்தியோகத்தர்களால் வழங்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விவசாயிகளின் குற்றச்சாட்டு

100 ஏக்கர் வரை நெற் செய்கை மேற்கொள்ளப்படும் குளத்தின் கீழ் 30 வரையான விவசாயிகள் காணப்படுகின்றார்கள். கடந்த சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளாமல் குளத்தின் அபிவிருத்தி பணிக்காக தண்ணீரை திறந்துவிட்டு குளத்தினை கொடுத்துள்ளார்கள்.

குளக்கட்டு வேலைகள் மற்றும் குளத்திற்கான கொட்டுகள் வைக்கும் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் அபிவிருத்திக்கான கால எல்லை 17.03.2023 தொடக்கம் 12.12.2023 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான காலபோக நெற்செய்கை கூட்டம் நடைபெற்று எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் விதைப்பினை மேற்கொள்ளவேண்டும் என விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதும் குளத்தின் பணிகள் நிறைவடையாத நிலையில் தற்போது பெய்துவரும் மழையினால் குளத்திற்கான நீர்வரத்து வரத்தொடங்கியுள்ளது இரண்டு கொட்டுக்களும் திறந்து விடப்பட்டுள்ளதால் தண்ணீர் விவசாய நிலங்களுக்குள் பாய்கின்றன. இதனால் காலபோக நெற்செய்கையினை மேற்கொள்வதில் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

விவசாயிகளின் பிரச்சினை

35 மில்லியன் ரூபா செலவில் புனமைக்கப்படும் குளத்தின் கட்டுமான பணிகள் சந்தேகமாக இருக்கின்றன. அங்கு சரியான கண்காணிப்பு இல்லை. குளக்கட்டின் ஒருபகுதிக்கே(குளத்தின் உள்பக்க கட்டிற்கு) அபிவிருத்தி செய்கின்றார்கள். குளக்கட்டின் வெளிப்பகுதிக்கு அபிவிருத்தி செய்யவில்லை. அங்கு குளக்கட்டிற்கு போடப்படும் மண் களிமண்ணாக இருக்க வேண்டும்.

கடந்த காலங்களில் இந்த குளக்கட்டு உடைப்பெடுத்தது நீர் திறந்துவிடும் கொட்டில் கசிவு ஏற்பட்டு ஆபத்தான நிலை காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாரிய நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் இந்த அபிவிருத்தி பணிகள் சரியாக மேற்கொள்ளப்பட வேண்டும். குளக்கட்டிற்கு கொண்டுவந்து போடப்படும் மண் மணல் மண்ணாக காணப்படுகின்றது.

வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே யானை கட்டில் ஏறி சென்றுள்ளது. யானையின் கால்தடங்கள் புதைந்து காணப்படுகின்றன. இந்த நிலையில் இந்த அபிவிருத்தி பணி தொடர்பில் உரிய திணைக்களம் சார் உத்தியோகத்தர்கள் சரியான கண்காணிப்பினை மேற்கொண்டு உறுதிப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குளத்தின் அபிவிருத்தி பணி

இதேவேளை தற்போது மழை வெள்ளம் குளத்திற்கு வரத்தொடங்கியுள்ளதால் இனிவரும் காலங்களில் குளத்தின் அபிவிருத்தி பணி என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

குளக்கட்டிலோ அல்லது குளத்திலோ எந்த பணிகளும் இனி செய்ய முடியாது குளக்கட்டிற்கு போடப்பட்ட மண் மழையினால் கரைந்து செல்லும். இந்த நிலையில் இன்று அவசர அவசரமாக குளக்கட்டிற்கு புல்லுகத்தை அடிக்கின்றார்கள்.

இந்த பணியில் அரச திணைக்களத்தினை சார்ந்தவர்கள் எவரும் கண்காணிப்பில் இல்லை என்றும் விவாசியகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குளத்தின் அபிவிருத்தி பணிகளில் ஏற்பட்டுள்ள இவ்வாறான தாமதம் மற்றும் இழுபறியான நிலை காரணமாக கால போக நெற்செய்கையினை மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல குளங்களில் சிறப்பான முறையில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை தொடர்பில் விவசாயிகள் தங்கள் குளம் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றது என கருத்து தெரிவித்துள்னர்.

உதாரணமாக ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள கூழாமுறிப்பு குளம் 42 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன, இது விவசாயிகளிடம் வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.