ஊழல் வழக்கில் சிக்கியுள்ள மலேசிய பிரதமருக்கு நெருக்கடி

329 0

201607220505224187_1MDB-case-that-has-riveted-Malaysia_SECVPFஊழல் வழக்கில் சிக்கியுள்ள மலேசிய பிரதமருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் போலி கம்பெனிகள் மூலமாக அமெரிக்காவுக்கு 1 பில்லியன் டாலர் அளவுக்கு மாற்றப்பட்டு, சொத்துக்கள், ஆடம்பரப்பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக  ‘ஒரே மலேசிய மேம்பாட்டு நிறுவனம்’ (1 எம்.டி.பி.) என்ற நிறுவனத்தை 2009-ம் ஆண்டு நிறுவினார். ஆனால் இந்த நிறுவனத்தில் இருந்து பெருந்தொகையை தன் வங்கிக்கணக்குக்கு அவர் சட்டவிரோதமாக மாற்றி விட்டதாக ஊழல் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மலேசியாவில் போராட்டங்களும் நடைபெற்றன.
ஆனால் தன் மீது கூறப்படுகிற புகாரை அவர் தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த நிறுவனத்தில் இருந்து போலி கம்பெனிகள் மூலமாக அமெரிக்காவுக்கு 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.6,700 கோடி) அளவுக்கு மாற்றப்பட்டு, சொத்துக்கள், ஆடம்பரப்பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு அமெரிக்கா சிவில் வழக்கு தொடுத்துள்ளது. இது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழக்கில் நஜிப் ரசாக்கின் பெயர் நேரடியாக குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் ‘மலேசிய அதிகாரி 1’ என்று அவர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.இது தொடர்பாக மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், கோலாலம்பூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘அமெரிக்கா தொடர்ந்திருப்பது சிவில் வழக்குதான். குற்ற வழக்கு அல்ல. அந்த வழக்குக்கு ஒத்துழைப்பு அளிக்கப்படும். அதே நேரத்தில் இந்த வழக்கை வைத்து முடிவுகளுக்கு வந்து விடாதீர்கள்’ என கேட்டுக்கொண்டார்.இந்த வழக்கு காரணமாக, உள்நாட்டில் நஜிப் ரசாக்கிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டி, நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.