போதைப்பொருள் மற்றும் புகைத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பில் நடைபெற்றது.
போதைப்பொருள் மற்றும் புகைத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு கொக்குவில் கிராமத்தில் இன்று நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பனிச்சையடி, கொக்குவில், சத்துருக்கொண்டான் ஆகிய கிராம சேவை பிரிவு கிராம பெண்களுக்கான போதைப்பொருள் மற்றும் புகைத்தல் தடுப்பு தொடர்பான ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கு இருதயபுரம் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி முகாமையாளர் செல்வி.பி.சாமினி தலைமையில் மட்டக்களப்பு கொக்குவில் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
மதுபாவனையில் முதல் இடத்தைப்பெற்ற மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது போதைப்பொருள், புகைத்தல் ஒழிப்பு தொடர்பில் பல விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் எமது வீட்டில் புகைபிடித்தல், மதுபாவனை, போதைப்பொருள் பாவனையை இல்லாதொழித்து ஆரோக்கியமாக வாழ்வோம் என்ற கருத்துரைகளும் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட அதிதிகளால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பெண்களின் தேவைக்கான பரிந்துரை செய்யும் வலையமைப்பின் இனைப்பாளர் திருமதி.ஆர்.ருத்ராதேவி, திவிநெகும முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி கே.நிர்மலா, நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.விஜேகுமார், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பயனாளிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.