ஜனாதிபதியின் மேற்குலகின் மீதான ஏமாற்றமே சர்வதேச விசாரணை நிராகரிப்புக்கு காரணம்

253 0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சம்பந்தமான சர்வதேச விசாரணையை நிராகரிப்பதற்கு காரணம் மேற்குலகின் மீதான ஏமாற்றமே என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த நான்கு வருடங்களாக உள்ளக விசாரணைகள் மூலம் நீதி கிட்டவில்லை என்பதனாலேயே சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜேர்மன் ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியின்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சம்பந்தமாக உள்ளக ரீதியிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படும், சர்வதேச விசாரணையை தான் முழுமையாக நிராகரிப்பதாக அறிவித்திருந்தார்.

இதுகுறித்து கருத்து வெளியிடும்போதே லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டை பொருளாதார ரீதியில் மீட்டெடுப்பதாக கூறி ஆட்சியை பொறுப்பெடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது அந்த இலக்கை அடைய முடியாது நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றார்.

குறிப்பாக, மேற்குலகம் அவருடைய தலைமைத்துவத்தின் கீழ் நாட்டை மீட்டெடுப்பதற்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும் தற்போது அதற்கான சாத்தியப்பாடுகள் குறைந்து வருகின்றன.

இதன்காரணமாகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜேர்மன் ஊடகத்துடனான நேர்காணலின்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான சர்வதேச விசாரணைக் கோரிக்கையை நிராகரித்தார். கத்தோலிக்க ஆயர் பேரவைக்கும், கர்தினாலுக்கும் இடையில் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டார்.

ஆனால், கத்தோலிக்க ஆயர் பேரவையும், கர்த்தினாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாக அறிவித்துள்ளனர். அதுமட்டுமன்றி, கடந்த நான்கு ஆண்டுகளாக உள்ளக விசாரணைகளினால் எவ்விதமான முன்னேற்றங்களும் காணப்படவில்லை. ஆகவே சர்வதேச விசாரணையொன்றின் ஊடாகவே நியாயமான உண்மைகளை கண்டறியலாம் என்ற எமது முடிவில் மாற்றமில்லை என்றார்.