முல்லைத்தீவில் கைவிடப்பட்ட அபிவிருத்திச் செயற்பாடு: முதலிடப்பட்ட நிதி வீணாக்கப்பட்டதால் விசனம்

99 0

முல்லைத்தீவு உண்ணாப்புலவில் உள்ள சிறு குளம் புனரமைக்கப்பட்டு வந்த நிலையில் அந்த புனரமைப்புப் பணிகள் இடை நிறுத்தப்பட்டு ஆண்டுகள் பல கடந்து விட்ட போதும் மீளவும் ஆரம்பிக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முற்றுப்பெறாது இடம்பெற்ற இந்த அபிவிருத்தி இடை நிறுத்தலானது நிதியை வீணடிக்கும் பொறுப்பற்ற செயல் என விமரச்சிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மாங்குளம் வீதியை (A34) உண்ணாப்புலவில் சந்திக்கின்றது திருகோணமலை முல்லைத்தீவு வீதி. (B 297) இந்த முச்சந்தி அமைவிடத்தில் மேற்கு இடது மூலையில் அங்கயற்கன்னி அன்னக்குடில் (உணவகம்)அமைந்துள்ளது.

இதன் பின்னாக அமைந்துள்ளது குறிப்பிட அபிவிருதிக்குள்ளான சிறு குளம். நகரை அழகுபடுத்தும் அரிய முயற்சியாக திட்டமிடப்பட்ட இந்த முயற்சி பின்னர் இடை நிறுத்தப்பட்டு விட்டது.

முன்னர் நீரேந்துபகுதியாக இருந்த இந்த இடம் ஆழமாக்கப்பட்டு அழகுபடுத்தும் திட்டமிடலுக்கேற்ப நீள் வட்டமாக அத்திவாரம் இடப்பட்டுள்ளது.

அடித்தளமிட்ட பின்னர் அதன் மீது அடுத்தடுக்கு கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு பாதி வேலை முடிந்தளவோடு தன் இலக்கை எட்டாது திட்ட வேலைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.

இந்த கட்டுமானப் பணிகள் முழுமையாக்கப்பட்டிருந்தால் முல்லைத்தீவில் சிறந்த காட்சிப்படுத்தல்களோடு கூடிய பொழுது போக்கிடம் கிடைக்கப் பெற்றிருக்கும் என முல்லைத்தீவு கடற்கரையில் தம் பொழுதை கழிக்க வந்த மக்களிடம் இந்த இடம் தொடர்பாக பேசியபோது கருத்துத் தெரிவித்திருந்தனர்.

2009 க்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாக சேவை அலுவலகம் அமைந்திருந்த இடத்திற்கு அண்மையில் இந்த குளம் இருக்கிறது என்பது குறித்துச்சொல்ல வேண்டிய விடயமாகும்.

அங்கயற்கன்னி அன்னக்குடில் அரச பேரூந்து பராமரிப்பகம் மற்றும் முல்லைத்தீவு பிராந்திய வைத்தியசாலை,கரைத்துறைபற்று பிரதேச செயலகம், முல்லைத்தீவு பிரதான இராணுவ முகாம் ஆகிய செயற்பாட்டு கட்டுமானங்களால் சூழப்பட்டிருக்கிறது.

அதிகமான மக்கள் வந்து செல்லும் இடமாதலால் இந்த முயற்சியினால் நிறையவே நன்மைகளை அடைந்திருக்கும் என்பது நோக்கப்பட வேண்டியது என சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையத்தினரின் கருத்தாக அமைந்திருந்தது.

திட்டமிடல் ஒன்றை இலக்கு நோக்கியதாக செயற்படுத்துவதில் காட்டும் அக்கறையானது அந்த திட்டமிடலின் ஒரு பகுதியாக இருத்தல் வேண்டும் என்பது இப்போது திட்டமில் பணிகளில் ஈடுபடும் மற்றும் அதனை நிறைவேற்றும் நிறுவனங்கள் சார்ந்தோரிடம் காணபபடாமையினை அவதானிக்க முடிகின்றது.

ஈழத்தில் மேற்கொள்ப்பட்ட பல அபிவிருத்தி முயற்சிகளில் இந்த இயல்பே அவதானிக்க முடிகின்றது.வீதியமைப்புக்களில் பாதையின் மொத்த நீளமும் அபிவிருத்திக்கான மொத்தச் செலவும் பொருந்தாத திட்டமிடலினால் பாதையின் ஆரம்பத்தில் மட்டுமே செம்பனிடல்கள் செய்து முடிக்கப்பட்டிருப்பதையும் மீதமுள்ள பாதை செப்பனிடாதிருப்பதையும் அவதானிக்கலாம்.

இது போன்றதொரு செயற்பாடாகவே இந்த குளம் அழகுபடுத்தும் செயற்பாடானது இடைநடுவில் கைவிடப்பட்டது.பல காரணங்கள் சொல்ல முடியுமென்றாலும் நிதி வீணாக்கப்பட்டுள்ளது என்பதை கருத்திலெடுத்தல் வேண்டும்.

மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கான நிதியானது இந்த முயற்சி இலக்கை அடையவில்லை என்றால் எந்தப் பயனையும் மக்களுக்கு வழங்கி விடப் போவதில்லை என்பது திண்ணம்.

இனிவரும் காலங்களில் இந்த சுட்டிக்காட்டல் நோக்கப்படுமா என்பது கேள்விக்குறி என தெரிவிக்கப்பட்டுள்ளது.