விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அன்புமணி வலியுறுத்தல்

142 0

நிதி நெருக்கடி காரணமாக கிடப்பில் போடாமல் சென்னை விமானநிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் அடுத்த சில மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் வட எல்லையான எண்ணூர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல 50 கிமீ பயணிக்க வேண்டும்.

அதற்கு வசதியாக பொதுப் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். பேருந்து வசதிகளை ஒரு கட்டத்துக்கு மேல் அதிகரிக்க முடியாது என்பதால், புறநகர் ரயில்கள், மெட்ரோ ரயில்கள்மூலமாக மட்டுமே அதிக எண்ணிக்கையிலான பயணிகளுக்கு போக்குவரத்து வசதியை வழங்க முடியும். அதற்கு கிளாம்பாக்கம் முதல் ஏற்கெனவே மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ள விமான நிலையம் வரை புதிய ரயில் பாதை ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம் ஆகும்.

திட்டச் செலவு ரூ.4,080 கோடி: கிளாம்பாக்கம் – விமான நிலையம்இடையிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை கடந்த 2021-ம் ஆண்டே தயாராகிவிட்டது. அதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிப்பதற்கு ஓராண்டுக்கு மேல் ஆனது. மொத்தம் ரூ.4,080 கோடி தேவைப்படும் 15.30 கி.மீ. நீளம் கொண்ட இந்த திட்டத்துக்கு தமிழக அரசுதான் முழுமையாக நிதி வழங்க வேண்டும்.

ஏற்கெனவே ரூ.61,843 கோடி மதிப்பிலான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி வழங்காததால், அதற்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.10,000 கோடியை தமிழக அரசே ஒதுக்கி வருவதாகவும், இத்தகைய சூழலில் கிளாம்பாக்கம் – விமான நிலையம் திட்டத்துக்கும் நிதி ஒதுக்குவது சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது.

மத்திய அரசு தாமதிக்க கூடாது: சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டம் மிக முக்கியமான திட்டம்ஆகும். இத்திட்டத்தை செயல்படுத்த நிதி தடையாக இருக்கக் கூடாது. நிதி நெருக்கடி காரணமாக கிடப்பில் போடக் கூடாது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசிடம் நிதி கோரி 2 ஆண்டுகளுக்கு முன்பே விண்ணப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இனியும் தாமதிக்காமல் மத்திய அரசு அதன் பங்கு நிதியை வழங்கவேண்டும். தமிழக அரசும் பன்னாட்டு நிதி அமைப்புகளிடம் நிதியுதவி பெற்றாவது விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.