மட்டு. சந்திவெளி பகுதியில் 12 வயது மாணவன் பாம்பு தீண்டி மரணம்

169 0
image
மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் பாம்பு தீண்டியதால் 12 வயது பாடசாலை மாணவன் பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளார்.

வந்தாறுமூலை விஷ்னு வித்தியாலயத்தில் எட்டாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவனான கந்தசாமி டிலக்ஷன் என்ற மாணவனே பாம்பு தீண்டி உயிரிழந்தவராவார்.

பாடசாலை விடுமுறை நாட்களில் தனது பெரியப்பாவின் சந்தனமடு ஆறு பிரதேசத்தில் உள்ள தோட்டத்துக்கு சென்று தங்கி நின்று வீடு திரும்பும் இவர், சென்ற 30/09 சனியன்று பெரியப்பாவுடன் சந்தனமடு ஆறு தோட்டத்துக்கு சென்று , ஞாயிறன்று கடுமையான மழை பெய்ததால் வீடு திரும்ப முடியாமல் அங்கேயே இருந்துள்ளார்.

திங்கட்கிழமை இரவு 09.00 மணியளவில்  தோட்டவாடியில்  உறங்கிக்கொண்டிருந்த இவருக்கு திடீரென வயிற்று நோவுடன் வாந்தியும் ஏற்பட மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலைக்கு பெரியப்பாவின் மோட்டார் சைக்கிளில் சென்று அனுமதிக்கப்பட்டபோது ,மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (03) மாலை 03.40 மணிக்கு மரணித்துள்ளார்.

தனது பிள்ளைக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லையென திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்..நஸீரிடம் தெரிவித்ததால் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மரண விசாரணையில் மாணவனின் வலது காலின் மேல் பாகத்தில் பாம்பு தீண்டியதால் குருதியோட்டத்தில் நஞ்சு கலந்து இதயம் செயலிழந்து மரணித்திருப்பது கண்டறியப்பட்டது.

பின்னர் சடலம் மாணவனின் பெற்றோரிடம் நல்லடக்கத்திற்காக ஒப்பபடைக்கப்பட்டது.