கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்டக் காணி பகிர்ந்தளிப்பில் அநீதி

35 0

கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்டக் காணி விவசாய நடவடிக்கைகளுக்காக பகிர்ந்தளிக்கப்பட்ட விடயத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

விவசாய காணியற்ற ஏழை மக்களுக்கு காணி பகிர்ந்தளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டபோதும், அவ்வாறு  பகிர்ந்தளிக்கப்படவில்லை எனவும் அந்த மக்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது :

சுமார் 196 ஏக்கர் பரப்பளவு கொண்ட கரும்புத் தோட்டக் காணியானது அதன் ஆரம்ப குத்தகைதாரர்களது குத்தகைக் காலம் நிறைவுற்றதும், அவர்களது உறவினர் ஒருவர் தொடர்ந்தும் பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அக்காணி விடயத்தில் தலையிட்ட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு, அந்தக் காணியை மீட்டு காணிகளற்ற ஏழை பொது மக்களுக்கு விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்கப்போவதாக அறிவித்து, பல கூட்டங்கள், விழாக்களை நடத்தியிருந்தன.

இறுதியில், விவசாய நடவடிக்கை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினால் பலருக்கு அந்த காணி பிரித்து வழங்கப்பட்டது.

காணிகளுக்கான பயனாளிகள் தெரிவானது முழுக்க முழுக்க மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினாலேயே மேற்கொள்ளப்பட்டு வழங்கப்பட்ட நிலையில், அவர்களால் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளில் பெரும்பாலானவர்கள் குறிப்பிட்டது போன்று காணிகளற்ற ஏழைகள் அல்ல எனவும் குறித்த ஒரு கட்சியின் ஆதரவாளர்கள் என்றும் பொது மக்களால் பெயர் விபரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவேதான், குறித்த காணி பகிர்ந்தளிப்பில் இடம்பெற்ற அநீதியை கருத்தில் கொண்டு அதனை மீள் பரிசீலனை செய்யுமாறு  பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.