வீட்டில் தனி‍த்திருந்த வயோதிபப் பெண்ணின் கழுத்தை அறுத்து, 10 பவுண் நகைகள் கொள்ளை

80 0

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள வீடொன்றினுள் புகுந்த நபர், வீட்டில் தனியாக இருந்த வயோதிப பெண்ணின் கழுத்தை கத்தியால் வெட்டி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுண் நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் இன்று திங்கட்கிழமை (2) காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு, கத்தியால் தாக்கப்பட்ட பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது :

கொம்மாந்துறை பகுதியில் தனிமையில் இருந்த 67 வயதான வயோதிபப் பெண்ணின் வீடடினுள் இன்று காலை 7.30 மணிக்கு துவிச்சக்கரவண்டியில் தனியாக சென்ற நபர், அந்த வீட்டினுள் நுழைந்துள்ளார்.

அவ்வேளை, வீட்டினுள் இருந்த வயோதிபப் பெண்ணின் கழுத்தை கத்தியால் வெட்டி தாக்கியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த பெண்ணின் கழுத்தில் இருந்த சுமார் 10 பவுண் நகைகளை கொள்ளையடித்து, தனது துவிச்சக்கர வண்டியில் தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து, வயோதிப பெண் சத்தமிட,  அங்கு வந்த அயலவர்கள் உடனடியாக பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர் என்பதும், தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு சென்ற ஏறாவூர் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார், தடயவியல் பிரிவு பொலிஸார் மோப்ப நாயுடன் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.