சந்திரராசா அகிலன் அவர்களுக்கு ”நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு -அனைத்துலகத் தொடர்பகம்.

172 0

27.09.2023

சந்திரராசா அகிலன் அவர்களுக்கு
”நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளரும் தமிழ்ச்சோலைப் பணியகத்தின் தேர்வுப்பகுதிப் பொறுப்பாளருமான சந்திரராசா அகிலன் அவர்கள், 22.09.2023 அன்று சாவடைந்தார் என்னும் செய்தி பிரான்சுவாழ் தமிழ்மக்களையும் புலம்பெயர் குமுகாயத்தையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இவர், தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் மீதும் தாய்மொழிமீதும் கொண்ட பற்றினால் 2002 ஆம் ஆண்டு லாக்கூர்னேவ் மாநகரத்தில் உருவான தமிழ்ச்சங்கத்தின் செயலாளராக இணைந்து தன் பணியைத் தொடங்கியவர். 2007 ஆம் ஆண்டில் மனித நேயச் செயற்பாட்டாளர்களின் கைதுகள், கெடுபிடிகளுக்கு மத்தியில் உறுதியுடன் நின்று தேசக்கடமையினைச் சிறப்பாக முன்னெடுத்த சூழமைவில், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளரால், தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தின் உபசெயலாளராகவும் பின், தேர்வுப்பகுதிப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்ட நாளிலிருந்து, தன் கடமையை முன்னெடுத்து உடல்நலக் குறைவினால் ஓய்வுபெறும் வரை அர்ப்பணிப்போடு பணிசெய்த சான்றோனாவார்.

தமிழ்ச்சோலையினால் நடாத்தப்பட்ட பட்டயக் கற்கைநெறியினை நிறைவுசெய்து, ‘‘இளங்கலைமாணி” என்ற பட்டத்தையும் பெற்றவராவார். இவர், தமிழ்ச்சோலைப் பணியகத்தின் ஆசிரியராகப் பணியாற்றியதோடு, ஆசிரியர்களுக்கான பட்டறைகளை நடாத்துவது, மெய்வல்லுனர் போட்டிகள் மற்றும் வாத்திய அணிகளை அணியஞ்செய்வதென பல்துறைசார்ந்த பணிகளை ஒருங்கிணைத்து நெறிப்படுத்திய திறலோனாவார்.

தமிழ்ச்சங்கக் கூட்டங்களை நடாத்துதல், ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததோடு, லாக்கூர்னேவ் மாநகர முதல்வருக்குப் பக்கத்துணையாக நின்று பணிகளைச் செய்த காலத்தில், அதே இடத்தில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவாக உருவச்சிலை நிறுவப்படவும் தொடர்ந்தும் நினைவேந்தல் செய்வதற்கான ஏதுநிலைகள் உருவாகவும் கடுமையாக உழைத்த விடுதலைப்பற்றாளனாவார். இளையோர் முதல் பெரியோர் வரை அனைவரது உள்ளங்களிலும் இடம்பிடித்ததோடு, தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களிடம் ஆழமான பற்றும் மாவீரர் ஈகங்களில் உறுதியான நம்பிக்கையும் கொண்டு இறுதிவரை செயற்பட்டதுடன், பல நாடுகளில் தமிழீழத் தேசிய மாவீரர்நாளில் தனது சிறப்புரைகள் ஊடாகவும் மாவீரர்களின் அர்ப்பணிப்புமிக்க தியாகங்களை வெளிப்படுத்தித் தமிழீழ விடுதலைக்கு வலுச்சேர்த்தவராவார்.

இத்தகைய விடுதலைப்பற்றுறுதியுடனும் தமிழ்மொழிப் பற்றுடனும் இறுதிவரை செயற்பட்ட செயற்பாட்டாளரைத் தமிழினம் இழந்து நிற்கின்றது. இவரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்வதுடன், சந்திரராசா அகிலன் அவர்களது தேசப்பற்றுக்காகவும் தமிழினத்திற்கு ஆற்றிய பணிகளுக்காகவும் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.