‘நீதிபதிக்கே உயிரச்சுறுத்தல் என்றால் எமக்கான நீதி எப்போது?

119 0

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று (01) காலை 10 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் சங்கத்தினரது போராட்ட இடத்துக்கு முன்பாக இப்போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘நீதிபதிக்கே உயிரச்சுறுத்தல் உள்ள நாட்டில் எமக்கு நீதி எப்போது?’, ‘சர்வதேசமே எமக்காக குரல் கொடுக்க எழுந்திரு’, ‘கையளிக்கப்பட்ட மாணவர்கள் எங்கே?’, ‘குடும்பமாக ஒப்படைக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே?’, ‘தமிழ் குழந்தைகள் என்ன பயங்கரவாதிகளா?’, ‘சின்னஞ்சிறு சிறார்களும் ஆயுதம் ஏந்தியவர்களா?’, ‘பாடசாலை சென்ற மாணவன் எங்கே?’ போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோஷங்களையும் எழுப்பினர்.

இலங்கையில் காணாமல்போன தமிழ் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் ஒளிப்படங்களையும் இதன்போது கைகளில் ஏந்தியிருந்தனர்.

இந்த போராட்டத்தில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன், காணாமலாக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், சிறுவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.