திருகோணமலை நிலாவெளி விகாரை : ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை துரத்தியடித்த பொலிஸார் !

81 0

திருகோணமலை பொரலுகந்த ரஜமகா விகாரையின் கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முற்பட்ட மக்களுக்கு நீதிமன்ற தடை உத்தரவை வாசித்து காட்டிய பொலிஸார், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க மறுத்ததுடன் அங்கிருந்தவர்களை துரத்தியடிக்கப்பட்டனர்.

திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் பொரலுகந்த ரஜமகா விகாரையின் கட்டுமானங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களால் ஞாயிற்றுக்கிழமை (01) காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸார் தடையுத்தரவை வாசித்து காண்பித்து மக்களை ஆர்ப்பாட்டம் செய்ய விடாமல் தடுத்ததோடு இதுதொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க விடாமலும் மக்களை அங்கிருந்து துரத்தியடித்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தை தடை செய்யக்கோரி   நிலாவெளி பொலிஸ் பொறுப்பதிகாரியினால்  திருகோணமலை நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 6ம் கட்டை பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு முன்பாக இலுப்பைக்குளம் சந்தியில் மற்றும் வீதியில் அல்லது அதற்கு அண்மித்த பகுதிகளில் மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்புக்கள் தெரிவிக்கவோ மற்றும் போராட்டங்களை நடத்த வேண்டாம் என தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசாரினால் தடையுத்தரவு வாசித்து காண்பிக்கப்பட்டது.

1979ம் ஆண்டு 15ம் இலக்க 106/1 என்ற சட்டத்தின் பிரகாரம் நிலாவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி கல்லெலுகே தொன் பிரதீப் நிஷாந்தகுமாரவின் கோரிக்கையின் அடிப்படையில் குறித்த தடையுத்தரவானது தமிழரசுக் கட்சியின்  திருகோணமலை மாவட்டக் குழுத் தலைவர் சண்முகம் குகதாசன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், தமிழ்த் தேசிய முன்னனியின் உறுப்பினர் கிருஸ்ணபிள்ளை ஸ்ரீபிரசாத், தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் ஜெரோம், செயலாளர் ரமேஸ் நிக்லஸ், குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பொன்னையா வைத்தியலிங்கம் மற்றும் நாகரத்தினம் திலகேஸ்வரன் ஆயோருக்கு எதிராகவும் குறித்த நடவடிக்கையில் பங்கேற்கும் அனைவருக்கும் எதிராக குறித்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த விடயம் தொடர்பாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் ஞாயிற்றுக்கிழமை (01) காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறித்த கட்டுமானப் பணிகள் தொடர்பாக உரையாடியதாகவும் இதன்போது அத்திவாரம் மட்டும்தான் போடப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

தமிழ் மக்கள் காலாகாலமாக வாழ்ந்து வருகின்ற சிங்கள மக்கள் இல்லாத குறித்த பகுதியில் விகாரை அமைப்பதற்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் குறித்த கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் இது இன முறுகலை ஏற்படுத்தும் செயற்பாடு எனவும் இன விகிதாசாரத்தை சிதைக்கும் திட்டமிட்ட செயற்பாடு எனவும் மக்கள் தமது ஆதங்கத்தை வெளியிட்டு வருகின்றார்கள்.