சென்னை விமான நிலையத்துக்கு புதிதாக சுங்கத் துறை முதன்மை ஆணையர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
ஓமன் நாட்டிலிருந்து 2 வாரங்களுக்கு முன்பு பயணிகள் விமானம் சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத் துறையினர், மத்திய வருவாய் புலனாய் துறையினர் சோதனை செய்தனர். அப்போது அந்த ஒரே விமானத்தில் 113 கடத்தல் குருவிகள் சிக்கினர். அவர்களிடம் இருந்து 13 கிலோ தங்கம், ஐபோன்கள் உள்ளிட்ட மொத்தம் ரூ.14 கோடி மதிப்புடைய கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் மீது வழக்கும் பதிவானது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்திலும், சுங்கத்துறை வட்டத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, சென்னை விமான நிலைய சுங்கத் துறையில் பணியாற்றிய 20 அதிகாரிகள் கடந்த வாரத்தில் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள நிதி அமைச்சகம், சென்னை சர்வதேச விமானநிலைய சுங்கத் துறை புதிய முதன்மை ஆணையராக ராமாவத் சீனிவாச நாயக் என்பவரை நியமனம் செய்துள்ளது. இவர் ஏற்கெனவே சுங்கத் துறை தலைமையகத்தில், தணிக்கை பிரிவில், முதன்மை ஆணையராக பணியில் இருந்தவர்.
சென்னை சர்வதேச விமான நிலையம் மற்றும் விமான நிலைய சரக்ககப் பிரிவு ஆகிய இரண்டுக்கும் சுங்கத் துறை முதன்மை ஆணையராக பணியிலிருந்த மேத்யூஸ் ஜோலி, இனி சென்னை விமான நிலைய சரக்கக பிரிவுக்கு மட்டும் முதன்மை ஆணையராகச் செயல்படவுள்ளார்.

