மனித உரிமைகளுக்கும், ஜனநாயகத்துக்கும் விரோதமான நிகழ்நிலைக்காப்பு சட்டமூலத்தை உடன் வாபஸ் பெறுங்கள்

65 0

நாட்டுமக்களின் மனித உரிமைகளுக்கும், ஜனநாயகக்கோட்பாட்டுக்கும் எதிரான உத்தேச நிகழ்நிலைக்காப்பு சட்டமூலத்தை உடனடியாக வாபஸ் பெறுமாறு இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் தொடர்பில் நாட்டின் முக்கிய கிறிஸ்தவக் கட்டமைப்புக்களின் பிரதிநிதிகளின் கையெழுத்துடன் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

தற்போது முன்மொழியப்பட்டுள்ள உத்தேச நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் தொடர்பில் நாம் தீவிர கரிசனை கொண்டிருப்பதுடன், அச்சட்டமூலத்தை முற்றாக வாபஸ் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

அரசாங்கத்தினால் கடந்த 18 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட நிகழ்நிலைக்காப்பு சட்டமூலமானது கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை வெகுவாகப் பாதிக்கக்கூடிய சாத்தியப்பாட்டை உயர்ந்தளவில் கொண்டிருப்பதாகவும், அது மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படைக்கோட்பாடுகளுக்கு ஏற்புடையவையாக அமையவில்லை என்றும் நாம் உறுதியாக நம்புகின்றோம்.

குறிப்பாக ‘நிகழ்நிலைக்காப்பு ஆணைக்குழு’ என்ற பெயரிலான கட்டமைப்பொன்றை ஸ்தாபிப்பதற்கான சரத்தை அச்சட்டமூலம் கொண்டிருக்கும் அதேவேளை, அந்த ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை மற்றும் பக்கச்சார்பின்மையை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான சரத்துக்கள் எவையும் அதில் உள்ளடக்கப்படவில்லை. இது ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் தலைவரைக் கொண்ட மேற்படி ஆணைக்குழு சமூகவலைத்தள செயற்பாடுகளை ஒடுக்குவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.

அதேபோன்று நிகழ்நிலைக்காப்பு சட்டமூலத்தின் 3 ஆம் பிரிவு சில கூற்றுக்கள் தொடர்பான நிகழ்நிலைத்தொடர்பாடல் மீது மட்டுப்பாடுகளை விதிக்கின்றது. இந்தப் பிரிவில் ‘குற்றம்’ என்ற பதத்தின்கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மிகவும் பரந்துபட்டவையாகக் காணப்படுகின்றன. இது ஜனநாயக சமூகத்தின் அடிப்படை குறிகாட்டியான நியாயமான விமர்சனங்களையும் எதிர்ப்புக்களையும் முன்வைத்தலைக் கட்டுப்படுத்துவதற்கு இடமளிக்கும். இச்சட்டமூலமானது பொதுமக்களின் உரிமைகள் மீதும், நாட்டின் ஜனநாயக சூழல் மீதும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதேவேளை, இந்த நிகழ்நிலைக்காப்பு சட்டமூல வரைபின் தயாரிப்புப்பணிகள் பொதுமக்கள் உள்ளிட்ட சகல தரப்பினருடனான கலந்துரையாடல்களின் அடிப்படையில் இடம்பெறவில்லை.

எனவே, மனித உரிமைகளுக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரான இச்சட்டமூலத்தை உடனடியாக வாபஸ் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.