அசமந்தப் போக்கினால் சட்ட விரோத காணி அபகரிப்புக்கு இடங்கொடுத்துள்ள பிரதேச சபைகள்

84 0

மஸ்கெலிய பிரதேச சபையின் எல்லைக்குட்பட்டு காணப்படும் அரச காணிகளில் சிலவற்றை தனியார் கைப்பற்றியுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக நீண்ட காலமாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பாதீட்டின் செலவீனங்களின்படி, சட்ட விரோத காணி ஆக்கிரமிப்பு ஒன்றுக்காக மட்டும் மஸ்கெலிய பிரதேச சபையானது 4 ½ வருடங்களுக்கு ரூ.275 000.00 பொது நிதியை செலவு செய்துள்ளது.

2019 தொடக்கம் 2022 வரையிலான 4 வருடங்களுக்கு ரூ.2,25,000 மற்றும் 2023ஆம் ஆண்டு முதல் ஆறு மாதங்களுக்கு ரூ.50,000  செலவிடப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் இன்னும் நிறைவு பெறவில்லை என பிரதேச சபை தரப்பு சட்டத்தரணி கூறுகிறார்.

மஸ்கெலியா பிரதேச சபையின் முகாமைத்துவ உதவியாளர் செல்வி தினுசாவின் கருத்துப்படி, இவ்வாறான மூன்று அத்துமீறல் சம்பவங்களுக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், முதலாவது வழக்காக பிரதேச சபைக்கு சொந்தமான விடுதியொன்றில் தங்கியிருந்த முன்னாள் வருமானவரி பரிசோதகர் ஒருவர் சேவையிலிருந்து ஓய்வுபெற்றதன் பின்னர், குறித்த விடுதியை கையளிக்காமல், அதிலிருந்து வெளியேற மறுத்துள்ளார். பல முறை அவருக்கான உத்தியோகபூர்வ கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக முகாமைத்துவ உதவியாளர் தினுசா கூறுகின்றார்.

எனினும், அந்த கடிதங்களுக்கு குறித்த நபர், பொறுப்பான நபர் பதிலளிக்காத காரணத்தினால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அப்போதைய அம்பகமுவ பிரதேச சபையானது முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

91686/15 என்ற வழக்கு இலக்கத்தின் கீழ் அந்நபருக்கு எதிராக ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச சபையின் வழக்கு ஆவணத்தினூடாக அறிய முடிகிறது.

இவ்வழக்கை அம்பகமுவ பிரதேச சபையானது முன்னெடுத்த போதும் குறித்த நபர் கடந்த 2014ஆம் ஆண்டு விடுதிக்கு புறம்பாக மேலுமொரு புதிய கட்டடத்தை அமைத்துள்ளமை தொடர்பாகவும், எஸ்.ஜீ. ஹீண்பண்டா என்ற நில அளவையாளரின் வரைபடத்துடன் பிரதேச சபை தரப்பு சட்டத்தரணியான டீ.தயானந்த அப்புஹாராச்சியினால் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு மஸ்கெலியா பிரதேச சபையானது ஸ்தாபிக்கப்பட்டவுடன் குறித்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் உள்ளூராட்சி திணைக்களத்தினால் மஸ்கெலிய பிரதேச சபைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

இன்று வரை வழக்கு நிலுவையில் உள்ளதுடன் மஸ்கெலியா பிரதேச சபையானது குறித்த வழக்கு தொடர்பாக செலவினங்களை செய்து வருகின்றது.

ஒவ்வொரு வழக்குத் தவணைக்குமான வழக்கறிஞர் கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய செலவுகளும் இப்பிரதேச சபையின் சபை நிதியின் மூலம் செலவிடுவதற்காக வருடாந்த வரவு – செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக பிரதேச சபை சட்டத்தரணி டீ.தயானந்த அப்புஹாராச்சியிடம் வினவியபோது அவர்,

“இது உண்மையில் அம்பகமுவ பிரதேச சபையினது அசமந்தப்போக்கின் காரணமாக இடம்பெற்ற ஒரு விடயமாகும்.

தற்போது மஸ்கெலிய பிரதேச சபையானது இந்த வழக்கினை செலவு செய்து தொடர வேண்டியுள்ளது” என்று கூறுகிறார்.

சட்டத்தரணியின் கருத்துப்படி, குறித்த வழக்கானது பிரதேச சபையின் முன்னாள் வருமான வரி பரிசோதகர் தனது விடுதியை கையளிக்காமல் ஆக்கிரமித்த சம்பவமாகும்.

தற்போது அந்த விடுதியை பிரதேச சபையின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்திருந்தாலும், அவர் மேலுமொரு தற்காலிக கட்டடத்தை அந்த இடத்தில் அமைத்துள்ளார். தற்போது இந்த வழக்கானது அந்த சட்ட விரோத கட்டடத்துக்கு எதிரானதாக வழக்கு முன்னெடுக்கப்படுகின்றது. மேலும் அந்த நிலத்தின் முழுமையான உரிமையும் பிரதேச சபைக்கு இல்லை என்பது சட்டத்தரணியின் கருத்தாகும்.

அவர் மேலும் கூறுவதாவது,

“குறித்த சட்ட விரோத கட்டடம் அமைக்கப் பெற்றுள்ள இடமானது இலங்கை மின்சார சபைக்கு பகுதியளவில் சொந்தமானது. 1987ஆம் ஆண்டின் பிரதேச சபை கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் உள்ளுராட்சி திணைக்களத்தினால் வழங்கப்பட்ட நிலவுரிமை அனுமதியை வைத்துக்கொண்டே இந்த வழக்கை முன்னெடுக்கின்றோம்.

மேலும் இந்த வழக்கில் பிரதிவாதி சார்பில் இதுவரை 8 வழக்கறிஞர்கள் முன்னிலையாகியுள்ளனர். ஆயினும் இறுதியாக இடம்பெற்ற வழக்கு விசாரணையில் சுகவீனத்தை காரணம் காட்டி பிரதிவாதி சபையில் ஆஜராகவில்லை. இந்த வழக்கில் நாம் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்களே அதிகமாக உள்ளன” என்று கூறுகின்றார்.

இந்த வழக்கு செலவீனங்களுக்காக வருடந்தோறும் ரூபாய் 150,000.00 பிரதேச சபையின் பாதீட்டில் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படுகின்றது.

2022ஆம் ஆண்டு வழக்கறிஞர் கட்டணமாக ரூ.107 512.50 செலவிடப்பட்டுள்ளது.

அதேபோல் 2021ஆம் ஆண்டு ரூ.1,50,000 மதிப்பீடு செய்யப்பட்டு ரூ.92,512.50 செலவிடப்பட்டுள்ளது. இது மஸ்கெலிய பிரதேச சபைக்கு ஒரு பிரத்தியேகமான மேலதிக செலவாகும்.

இவ்விடயங்கள் தொடர்பாக மஸ்கெலியா பிரதேச சபையின் செயலாளரிடம் வினவியபோது அவர் கூறியதாவது :

இந்த சம்பவம் இடம்பெற்றது அம்பகமுவ பிரதேச சபையின் காலப்பகுதியிலாகும். குறித்த நபர் தற்போது சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட கட்டடத்தை பராமரித்து வருகின்றார்.

மேலும், மஸ்கெலியா பிரதேச சபைக்கு எதிராகவும் அந்நபர் நஷ்ட ஈடு கேட்டு, வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்குக்காக பிரதேச சபையின் நிதி பயன்படுத்தப்படுவது உண்மை. நாம் முடிந்தவரையில் இந்த வழக்கை விரைவாக முடித்து குறித்த காணியை பிரதேச சபையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போதுமான முயற்சிகளை மேற்கொள்கின்றோம் என்று கூறினார்.

இந்த வழக்கு தொடர்பாக குறித்த பிரதிவாதியை நாம் அணுகி அவர் தரப்பு நியாயங்களை வினவியபோது, அவர் சார்பாக முன்னிலையான அவரின் புதல்வர் வழக்கு நிலுவையில் உள்ளதால் தன்னால் அது தொடர்பாக எவ்வித கருத்தினையும் தெரிவிக்க முடியாது என்று பதிலளித்தார்.

எவ்வாறாயினும், இவ்விடயம் அம்பகமுவ பிரதேச சபையின் அசமந்தப் போக்கின் காரணமாக இடம்பெற்றுள்ளதும், தற்போது மஸ்கெலிய பிரதேச சபையின் நிதி பயன்படுத்தப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது என்றும் சட்டத்தரணி அப்புஹாராச்சி கூறுகின்றார்.