மகிந்தவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் திடீர் மரணம், தலைமையகம் விளக்கம்!

198 0

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவின் மெய்ப்பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய காவல்துறை உறுப்பினர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளமை தொடர்பாக காவல்துறை தலைமையகம் விளக்கமளித்துள்ளது.

செனரத் பதிரன்னஹிலாகே சுமித் செனவிரத்ன என்பவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். பதவியுயர்வுக்கான உடற்தகுதி தேர்வு பயிற்சியில் ஈடுபட்டிருந்த போதே நேற்று காலை இவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

இவர் நேற்று கொழும்பு, காமினி சினிமா தியேட்டர் சுற்றுவட்டத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது திடீரென சுகயீனமுற்றுள்ளார். பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தலைமையகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பயிற்சியிலீடுபட முன்னர், இவர் மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார். மருத்துவரின் சிபாரிசின் பின்னர் தான் இவர் உடற்தேர்வு பரிசீலனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

24 வருடங்கள் பொலிஸ் சேவையில் பணியாற்றியுள்ள இவர், மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இரண்டு குழந்தைகளின் தந்தையான இவரின் பிரேத பரிசோதனை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாகவும் தலைமையகம் அறிவித்துள்ளது.