அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டுக்கு சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல்

229 0

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீதப் பங்குகளை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கும், அதனையொட்டியதாக கைத்தொழில் வலயம் ஒன்றை அமைப்பதற்கும் சீன நிறுவனத்துடன் செய்து கொள்ளப்படும் உடன்பாட்டுக்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று அனுமதி அளித்துள்ளது.

இந்த தகவலை நாடாளுமன்றத்தில் நேற்று சிறிலங்காவின் சிறப்புத் திட்டங்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம வெளியிட்டார்.

அம்பாந்தோட்டை கூட்டு முயற்சித் திட்டங்கள் தொடர்பாக சிறிலங்கா அதிபரால் அமைக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட அமைச்சரவைக் குழுவின் தலைவரான கலாநிதி சரத் அமுனுகம இதுதொடர்பாக ததகவல் வெளியிடுகையில்,

‘அம்பாந்தோட்டை துறைமுகம் பிராந்தியத்தில் முன்னணி அனைத்துலக துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்படும்.

இதுதொடர்பாக அமைச்சரவை அனுமதி பெறப்பட்டிருப்பது முக்கியமானதொரு மைல்கல்.  இங்கு அமைக்கப்படவுள்ள கைத்தொழில் வலயத்தில், 400 தொழில்நிறுவனங்கள் அமைக்கப்படும். தெற்காசியாவின் மிகப்பெரிய கைத்தொழில் வலயமாக இது இருக்கும்.

இந்த கூட்டு முயற்சி உடன்பாட்டுக்கு அமைய சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு 80 வீத பங்குகள் அளிக்கப்படும். எஞ்சிய 20 வீத உரிமை சிறிலங்கா அரசாங்கத்திடம் இருக்கும்.

ஐந்து மாதங்களின் பின்னர், 20 வீத பங்குகள் பங்குச் சந்தையில் விற்கப்படும். ஐந்து மாதங்களுக்குள் சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்குகளை 80 வீதத்தில் இருந்து 60 வீதமாக குறைக்க முடியும். எமது பங்கு உரிமையை 40 வீதமாக அதிகரிக்க முடியும்.

இந்தக் கூட்டு முயற்சி உள்ளூரில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனமாக இயக்கப்படும். துறைமுகத்தின் பாதுகாப்பு தொடர்பான செயற்பாடுகள் சிறிலங்கா கடற்படையினரால் கையாளப்படும்.” என்றும் அவர் தெரிவித்தார்.