மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் பி.எம்.எஸ்.படகொடவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தனவுக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணைகளின் போது, நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக செயற்பட்ட காலத்தில் சொத்து விபரங்களை வௌியிடாமை தொடர்பில் சரன குணவர்த்தனவுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, முதலாவது சாட்சியாளரான படகொட நீதிமன்றத்தில் ஆஜராகாமை குறித்து கொழும்பு பிரதம நீதவான் அவதானம் செலுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய படகொடவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும், மின்சக்தி அமைச்சின் செயலாளரால், தனது பிரதிநிதி ஒருவர் இன்று நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். எனினும், அதனை ஏற்க மறுத்த நீதிபதி, தனிப்பட்ட வகையில் சாட்சியாளருக்கு (படகொட) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையால், அவரது சார்பில் பிரதிநிதிகள் முன்னிலையாக முடியாது எனவும் கூறியுள்ளார்.

