கொக்குத்தொடுவாய் கொலைகளை செய்தவர்களே விசாரணை நடத்தினால் நீதி கிடைக்காது

89 0

கொக்குத்தொடுவாய் விடயம் கொலையை செய்தவர்களே விசாரணைகளை செய்தால் எந்த முறையில் நியாயம் கிடைக்கும் என கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க.தவராசா கேள்வியெழுப்பியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் நேற்று முன்தினம்  (22.09.2023) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இன்று சர்வதேச சமாதான தினம். ஆனால் 30 ஆண்டுகளுக்கு மேலாக சமாதானம் அற்றவர்களாக இலங்கையிலே பெரும் பகுதியான தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எங்களுடைய நாட்டிலே யுத்த குற்றம் இடம்பெற்றது.

அதில் சாட்சியாக நானே இருக்கின்றேன். கொத்துக் குண்டு விழுந்து என்னுடைய நண்பர்கள் இறந்ததையும், பொஸ்பரஸ் குண்டுகள் விழுந்து முகாம்கள் எரிந்ததையும் நேரில் கண்டேன். சனல் 4 னை பற்றி சிங்கள அமைச்சர்கள் இது பொய்யான விடயம் என கூறுகிறார்கள்.

அதனால் தான் சர்வதேசத்தை கேட்டு நிற்கின்றோம். சர்வதேசம் நீதியானதாக , நியாயமானதாக இருந்தால் இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என அழிக்கப்பட்ட , ஒடுக்கப்பட்ட , படுகொலை செய்யப்பட்ட மக்கள் சார்பாக கேட்டு கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.