ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம்- ரணில் விடுத்துள்ள உத்தரவு

134 0

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவால் உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்வாக மற்றும் செயற்பாட்டு விவகாரங்களை இலங்கை தொழிநுட்ப பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக, இந்த பல்கலைக்கழகம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.

இதனை தொடர்ந்து அதனை பல்கலைக்கழகத்தின் உரிமையாளரும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான எம்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் மட்டக்களப்பு புனானியில் அமைந்துள்ள பல்கலைக்கழக நிர்வாகத்தை தொழிநுட்பப் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைத்ததன் பின், தொழிநுட்ப பல்கலைக்கழகத்தின் நடைமுறைக்கு அமைவாக செயற்படவும், கற்பிக்கவும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி, ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மட்டக்களப்பில் உள்ள இப்பல்கலைக்கழகம் முழுமையான கட்டடங்கள் மற்றும் சகல வசதிகளுடனும் காணப்படுவதுடன், இவ்வாறான வளாகங்களை ஒன்றுமில்லாமல் மூடுவது தேசிய குற்றமாகும் என்பதால், தொழிநுட்ப பல்கலைக்கழகத்தின் கீழ் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக இவ்வாறான வளாகங்களை பராமரிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தெரியவருகிறது.