மாவீரர் உலகக்கிண்ண காற்பந்தாட்டச் சுற்றுப் போட்டி-2023, தமிழீழ விளையாட்டுத் துறை. அனைத்துலகத் தொடர்பகம்.

1500 0

தமிழீழ விளையாட்டுத்துறை அனைத்துலகத் தெடர்பகத்தினால் மாவீரர் நினைவுசுமந்த உலகக்கிண்ணக் காற்பந்தாட்டச் சுற்றுப் போட்டியை சோலிங்கன் நகரிலே 16.09.2023 அன்று சிறப்பாக நடாத்தியது. தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்த உலகக்கிண்ணக் காற்பந்தாட்டச் சுற்றுப்போட்டி நிகழ்வரங்கின் வலதுபுறத்தே தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் திருவுருவப்படத் தூபியும், மாவீரர் நினைவு வணக்கத் திருவுப்படத் தூபியும் அணிசெய்ய இடதுபுறத்தே போட்டியிலே பங்குபற்ற வருகைதந்த சுவிஸ்,நெதர்லாந்து, இங்கிலாந்து, பிரான்ஸ்,பெல்யியம் மற்றும் யேர்மனி நாடுகளின் தேசியக்கொடிகள் அணிவகுத்து நிற்க தொடக்க நிகழ்வரங்கம் தாயகத்திலே நடைமுறையரசின் காலத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை நினைவூட்டுவதாக இருந்தது.

தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்த உலகக்கிண்ணக் காற்பந்தாட்டச் சுற்றுப்போட்டி, பொறுப்பாளர்கள், தமிழீழ உதைபந்தாட்ட அணியின் வீரர்கள் பொதுமக்கள்,என நிகழ்வரங்கின் முன்பாக அணிவகுத்து நிற்கக் காலை 9:00மணிக்குப் பொதுச்சுடரேற்றலோடு தொடங்கியது. பொதுச்சுடரினை செல்வன் கிசாந்தன் நாகராசா- தமிழீழ உதைபந்தாட்ட அணியின் வீரர் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து யேர்மன் தேசியக்கொடியினை திரு.சுப்பிரமணியம் ஜெயசங்கர்- துணைப்பொறுப்பாளர்-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனிக்கிளை அவர்கள் ஏற்றிவைத்தார்.
தமிழீழத் தேசியக்கொடியினை திரு பொ.மகேஸ்வரன்- அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தமிழீழ விளையாட்டுத் துறையின் கொடியினை திரு.மதியழகன்- அனைத்துலக விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் -சுவிஸ், அவர்கள் ஏற்றிவைத்தார். பின்பு ஈகைச்சுடரினை செல்வி தமிழினி பத்மநாதன் – துணைப்பொறுப்பாளர்- தமிழ்ப் பெண்கள் அமைப்பு-யேர்மனி அவர்கள் ஏற்றிவைத்தார்.

போட்டி நடைபெற்ற16.09.2023ஆம் நாளானது தியாக தீபத்தின் உண்ணா நோன்பேற்பின் 2ஆம் நாளாகவும் அமைந்திருந்தது. அந்நாளில் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களுக்கு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டதோடு, நினைவுச்சுடரினை செல்வன்.கியூட்டன் – பொறுப்பாளர்- தமிழ் இளையோர் அமைப்பு-பெல்ஜியம் -அனைத்துலகத் தொடர்பக விளையாட்டுத்துறையின் முக்கிய உறுப்பினர. அவர்கள் ஏற்றிவைத்தார்.

பின்பு தியாகதீபத்தின் திருவுருவப்படத்திற்கு திரு. தர்மலிங்கம் இராஜகுமாரன் – பொறுப்பாளர்- தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு-யேர்மனி
செல்வன் அஜீவ் கிரிதரன்-மாவீரர் பணிமனைச் செயற்பாட்டாளர்-யேர்மனி. ஆகிய இருவரும் அணிவித்தனர்.
தொடர்ந்து மாவீரர் நினைவு வணக்கத் திருவுப்படத்திற்கும் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. மலர்மாலையினை திரு. யோன்பிள்ளை சிறீரவீந்திரநாதன் – பொறுப்பாளர்- தமிழர் ஒருங்கிணைப்புக் குழு- யேர்மனி, திரு.ஆனந்தன் – பொறுப்பாளர்-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – இங்கிலாந்து ஆகிய இருவரும் அணுவித்தனர்.

தொடர்ந்து வருகைதந்த அனைவராலும் மலர்வணக்கம் செய்யப்பட்டது. மலர்வணக்கத்தை அடுத்து அகவணக்கம் இடம்பெற்றது. தொடக்க நிகழ்வுகளில் தொடர்ந்து டோட்முன்ட் தமிழாலய மாணவர்களின் அணிவகுப்பும், அரங்கிலே நடன ஆசிரியர் „ஆடற்கலைமணி’ திருமதி ரஜனி சத்தியகுமார் அவர்களின் மாணவர்களான நிமலன் சத்தியகுமார், மதுசா றஞ்சித் மற்றும் அபிரா தயாபரன் ஆகியோரின் எழுச்சி நடனமும் நடைபெற்றது. தொடக்க நிகழ்வுகளின் நிறைவாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மன் கிளைப் பொறுப்பாளர் திரு.யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து அனைத்துலக விளையாட்டுத் துறையின் பொறுப்பாளர் திரு. மதியழகன் அவர்களால் அனைத்துலக உலகக் கிண்ணப்போட்டியினது நோக்கம் பற்றித் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

முதல்முறையாக நடாத்தப்பட்ட தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்த உலகக்கிண்ணக் காற்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் சுவிஸ்,நெதர்லாந்து, இங்கிலாந்து,பிரான்ஸ்,பெல்யியம் மற்றும் யேர்மனி உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்த 14 அணிகள் பங்கேற்றிருந்தன. தொடக்கம் முதல் இறுதிவரை நடைபெற்ற போட்டியில் ஆண், பெண் அணிகள் தமது திறமைகளை முழுமையாகப் பயன்படுத்திப் போட்டிகளில் களம்கண்டன. பார்வையாளர்களும், ஆதரவாளர்களும் உற்சாகம் ஊட்ட மைதானமெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் கரைகடந்தோடியது. ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் அணிகளும் களமாடியதைக் கண்டு பார்வையாளர்கள் மெய்சிலிர்த்துப் போயினர் என்பதை அவர்களது உரையாடல்கள் மூலம் அறியமுடிந்தது.

போட்டியின் நிறைவாக வெற்றிகளைத் தமதாக்கிய அணிகள் மதிப்பளிப்பைப்பெற்றன. 15வயதுக்குட்பட்ட அணிகளில் முதல் மூன்று நிலைகளை முறையே,

பெண்கள் அணிகளில் முதல் மூன்று நிலைகளை முறையே
முதலாவது இடத்தினை யேர்மனி அணியும்
இரண்டாவது இடத்தினை சுவிஸ் அணியும்
மூண்றாவது இடத்தினை நெதர்லாந்து அணியும் தமதாக்கிக் கொண்டனர்.

ஆண்கள் அணிகளில் முதல் மூன்று நிலைகளை முறையே
முதலாவது இடத்தினை யோர்மனி அணியும்
அரன்டாவது இடத்தினை பிரான்சு அணியும்
மூண்றாவது இடத்தினை சுவிஸ் அணியும் தமதாக்கிக் கொண்டனர்.

வளர்ந்தவர்களுக்கான அணிகளில்
முதலாவது இடத்தினை பிரான்சு அணியும்
இரண்டாவது இடத்தினை இங்கிலாந்து அணியும்
மூன்றாவது இடத்தினை நெதர்லாந்து அணியும் தமதாக்கிக் கொண்டனர்.

இவர்களுக்கு வெற்றிக் கேடயங்களும் பதக்கங்களும் அணுவித்து மதிப்பளிக்கப்பட்டது.
அத்தோடு சிறந்த வீர, வீராங்கனைகளுக்கான மதிப்பளிப்பும் இடம்பெற்றது.

அதேவேளை ஸ்பெய்னில் நடைபெற்ற நாடற்ற இனங்களுக்கான ஆசியக் கிண்ணத்துக்கான போட்டியில் பங்குபற்றி வெற்றிக்கிண்ணத்தைத் தமிழீழ அணி பெற்றிருந்தது. அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் மற்றும் செயற்பாட்டு வீரர்களுக்கும் மதிப்பளிப்பு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

நிறைவாகத் யேர்மன் மற்றும் தமிழீழ தேசியக் கொடிகளின் கையேற்பும், தமிழீழ விளையாட்டுக் கூட்டமைப்பின் கொடியின் கையேற்பையடுத்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற தமிழரின் தாகம் சுமந்து நிறைவுற்றது.