கொழும்பு துறைமுக நகரம் ‘கொழும்பு நிதி நகரம்’ என பெயர் மாற்றம் பெறலாம் – பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்

135 0

கொழும்பு துறைமுக நகரத்தின் பெயரை ‘கொழும்பு நிதி நகரம் ‘என்று மாற்றியமைப்பதற்கு வாய்ப்புண்டு.எதிர்வரும் 26 ஆம் திகதி டுபாய், அபுதாபி ஆகிய நாடுகளின் முதலீட்டாளர்களுக்காக கொழும்பு துறைமுக நகரம் உத்தியோகப்பூர்வமாக  அறிமுகப்படுத்தப்படும்.

இந்த நிகழ்வில் விசேட அதிதியாக  பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் கலந்துக் கொள்ளவுள்ளார் என   பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட  வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

கொழும்பு துறைமுக பொருளாதார நகரம் இலங்கையின் பிரதான முதலீட்டு வலயமாக காணப்படுகிறது. 269 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ள துறைமுக நகரம்  ஐந்து பிரதான பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 19 வணிக வலயங்களையும்,44 பொது வலயங்களையும் உள்ளடக்கியுள்ளது.

19 வணிக வலயங்களை முன்னிலைப்படுத்தி முதலீடுகளை மேற்கொள்ள  பல்வேறு துறைகளை தொடர்புப்படுத்தி 17 முதலீட்டாளர்கள் முன்னிலையாகியுள்ளார்கள்.இதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து கொழும்பு துறைமுக பொருளாதார நகரத்தின் அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

இதனால் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்ட சீன நிறுவனத்துக்கு மேலதிகமாக ஒரு தொகை நிலப்பரப்பை வழங்க வேண்டியிருந்தது.

அபிவிருத்தி கட்டுப்பாட்டு திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் பெற்றுக்கொடுக்கும் திட்டமாக கொழும்பு துறைமுக பொருளாதார நகரம் காணப்படுவதால் எதிர்க்கட்சிகள் எவரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

கொழும்பு துறைமுக பொருளாதார நகரம் எதிர்வரும் 26 ஆம் திகதி டுபாய் மற்றும் அபிதாபி நாட்டு முதலீட்டாளர்களுக்காக உத்தியோகப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும்.

இந்த நிகழ்வில் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் விசேட அதிதியாக கலந்துக் கொள்வார்.

கொழும்பு துறைமுக நகரத்தின்  பெயர் ‘ கொழும்பு நிதி நகரம் ‘ என்று மாற்றப்படுவதற்கு வாய்ப்புண்டு.இருப்பினும் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை.

புதிய விதிமுறைகளுக்கு அமைய  துறைமுக நகரத்தில் மாற்றம் ஏற்படுத்தினால் மாத்திரமே உச்ச பயன் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.