ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்கி திருடப்பட்ட சொத்துக்களை மீளப்பெற வேண்டும்

163 0

திருட்டை நிறுத்தாமல் நாட்டை திருத்த முடியாதல்லவா? முதலில் ஊழல், மோசடிகள், வீண்விரயம் என்பவற்றை நிறுத்த வேண்டும்.

வேறு வழி கிடையாது. திருட்டை ஒழிக்க வேண்டும். இவ்வளவு காலம் ஊழல்,மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்து திருடப்பட்ட சொத்துக்களை மீள பெற்றுக்கொள்ள வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை, நெடோல்ப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்த நாட்களில் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களிலும் திசைகாட்டி பற்றியே கதைக்கப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தி பற்றியே அதிகம் விமர்சிக்கிறார்கள். அவர்களுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது.அவர்கள் குற்றவாளிகள் என்பதனாலேயே பயப்படுகிறார்கள்.

எம்மை கண்டு பயந்துள்ளார்கள் என்பது எமக்கு புரிகிறது.அவர்கள் பொருளாதாரத்தை இல்லாமல் செய்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் சென்ற குற்றவாளிகள். ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள். அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக பாரிய குற்றச் செயல்களை செய்தவர்கள்.அதிகாரத்தில் இருக்கும் போதும் குற்றச் செயல்களை செய்தார்கள்.

மஹிந்தவின் ஆட்சியில் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருக்கும் போது ஊடகவியலாளர் ஒருவரை கொலை செய்தனர்.

தாஜுதீனை கொலை செய்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ராஜபக்ஷக்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பாரிய சதி என்பது சனல் 4 வெளியிட்ட காணொளி மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தங்களுக்கு எதுவித தொடர்புகளும் இல்லை என கூறும் ராஜபக்ஷக்கள் உண்மைகளை வெளிக்கொணர வேண்டும்.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பல கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். இது திட்டமிட்ட தாக்குதல் என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே இது தொடர்பில் உண்மை வெளிப்படுத்த வேண்டும். விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இருப்பினும் அவர்கள் அதை செய்ய மாட்டார்கள்.

அவ்வாறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்படும் போது ராஜபக்ஷக்கள் சிறைக்கே செல்ல வேண்டி ஏற்படும். எனவே அதை அவர்கள் செய்ய மாட்டார்கள்.

ஊழல் மோசடிகள், வீண் விரயம் என்பவற்றை நிறுத்த வேண்டுமல்லாமா? ஆம் நிறுத்த வேண்டும். திருட்டை ஒழித்தால் நாட்டை திருத்தி விட முடியும் என யார் ஒருவர் கூறினாலும் அது சரி.

ஆனால் திருட்டை நிறுத்தாமல் நாட்டை திருத்த முடியாது?முதலில் ஊழல் மோசடிகள்,வீண் விரயம் என்பவற்றை நிறுத்த வேண்டும்.

வேறு வழி கிடையாது. திருட்டை ஒழிக்க வேண்டும் என்பதும் இவ்வளவு காலம் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதுமே திசைக்காட்டியின் முதலாவது விடயமாக உள்ளது. அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்து திருடப்பட்ட சொத்துக்களை மீள பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.