வத்தளை, கெரவலப்பிட்டி குப்பை மேடு கழிவு முகாமைத்துவ பூங்காவாக அபிவிருத்தி !

203 0

வத்தளை, கெரவலப்பிட்டி குப்பை மேடு கழிவு முகாமைத்துவ பூங்காவாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கமைய, கழிவு முகாமைத்துவத்தின் ஊடாக தூய்மையான சூழலைப் பேணுவதற்காக, இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தினால் இந்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

கழிவுகளை பயன்படுத்தி இயற்கை உரம் தயாரிப்பதுடன், எரி எண்ணெய் உற்பத்தி, முதன்மை கரி உற்பத்தி மற்றும் பிற புதுமையான பொருட்களை உற்பத்தி செய்து இந்த பூங்கா உருவாக்கப்படவுள்ளதாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மேலும், கெரவலப்பிட்டி குப்பை மேட்டில் மக்குகின்ற குப்பைகளை பயன்படுத்துவதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 20 மெற்றிக் தொன் குப்பைகள் இயற்கை உரம் உற்பத்தி செய்யப்பட்டு சில்லறை சந்தைக்கு விடப்படுகிறது.

 

கெரவலப்பிட்டி குப்பை மேட்டில் சுமார் 1500 தொன் இயற்கை உரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கெரவலப்பிட்டி குப்பை மேட்டில் உற்பத்தி செய்யப்படும் உரத்தில் பாதரசம் மற்றும் ஈயம் இல்லை என்பதும் விவசாயத் தேவைகளுக்கு மிகவும் ஏற்றது என்பதும் ஆய்வக சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இயற்கை உர உற்பத்திக்கு நீண்ட கை, குறுகிய கை, ஜே.சி.பி. (பெரியது), ஜே.சி.பி. (சிறியது), பொக்ஸ் கட் மெஷின், ஜன்னல் டர்னர், டக்கர் இயந்திரம், டிப்பர், கையால் இயக்கப்படும் குப்பைத் தரம் பிரிக்கும் இயந்திரம், தானியங்கி குப்பைத் தரம் பிரிக்கும் இயந்திரம், குப்பையிலிருந்து இயற்கை உரம் பிரிக்கும் இயந்திரம் ஆகியவையும் குப்பை கிடங்கில் நிறுவப்பட்டுள்ளன.

மேலும், கெரவலப்பிட்டி குப்பைக் கூடத்தில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை உரம் சேகரிக்க தேவையான இயந்திரங்களும் உள்ளன.

இது தவிர, எரி எண்ணெய் உற்பத்திக்காக இங்கு ஏற்கனவே சுமார் ஒன்றரை இலட்சம் தொன் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் சேகரிக்கப்பட்டுள்ளது.

அவை எதிர்காலத்தில் எரி எண்ணெய் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் என இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதற்காக தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயற்படுவதாகவும் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த குப்பை கிடங்கில் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என குப்பைகள் இரு வகைகளாக பிரிக்கப்படுகின்றன.

கொழும்பு நகர சபை பிரதான கழிவு வழங்குநராக செயற்படும் அதேவேளை, வத்தளை, ஜா/எல, தொம்பே, அத்தனகல்ல உள்ளூராட்சி மற்றும் நகர சபைகள் மற்ற கழிவு விநியோகத்தர்களாக செயற்படுகின்றன.

இது தவிர பல தனியார் துறை விநியோகத்தர்களும் கெரவலப்பிட்டி குப்பை மேட்டில் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி நாளொன்றுக்கு 550 மெற்றிக் தொன் மக்கக்கூடிய கழிவுகளும், 250 மெற்றிக் தொன் மக்காத குப்பைகளும் கெரவலப்பிட்டி குப்பை மேட்டில் பெறப்படுகின்றன.

இவ்வாறு பெறப்படும் குப்பைகள் மக்குவதற்கு சுமார் 06 மாதங்களாக குப்பை மேடுகளாக குவிந்து கிடக்கின்றன. அங்கு, குப்பையின் துர்நாற்றத்தை அகற்ற, ஒரு சிறப்பு மருந்து பயன்படுத்தப்படுகிறது. அதன் பிறகு, பல படிகள் உற்பத்தி செயல்முறைள் பின்பற்றப்பட்டு, பிறகு, உயர்தரமான இயற்கை உரக் கலவை தயாரிக்கப்படுகிறது.

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்த பின்னர், கெரவலப்பிட்டி குப்பை மேடு திட்டம் இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தினால் 2017 ஏப்ரலில் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான கெரவலப்பிட்டி பிரதேசத்தில் 400 ஏக்கர் காணியில் இந்த குப்பை மேடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கெரவலப்பிட்டிய குப்பை மேட்டில் இதுவரை பராமரிக்கப்பட்டு வரும் உரத் திறனை அதிகரிப்பதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.