வட்டக்கச்சி விவசாய காணியை இராணுவம் மீள ஒப்படைக்க வேண்டும்

290 0
வட்டக்கச்சியில் உள்ள வட மாகாண விவசாயத் திணைக்களத்திற்குச் சொந்தமான விவசாயப் பண்ணையினையும் இராணுவம் திணைக்களத்திடம் கையளிக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட இரணைமடு விவசாய சம்மேளனம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக சம்மேளனத்தின் செயலாளர் மு.சிவமோகன் தெரிவித்தார்.
இது குறித்து விவசாய சம்மேளனத்தின் செயலாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
வட்டக்கச்சியில்  வட மாகாண விவசாயத் திணைக்களத்திற்குச் சொந்தமான 435 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட ஓர் பெரிய  விவசாயப் பண்ணை உள்ளது. இப் பண்ணையானது இறுதி யுத்தத்தின் முன்னர் பல நூற்றுக்கணக்கான விவசாயிகளின் தொழில் மையமாகவும் விவசாயிகளிற்கான பயிற்சிக் கூடம் , விவசாய விதை இனங்கள் உற்பத்திப் பிரிவு என்பவற்றுடன் கால் நடை பண்ணை தொடர்பான செயல்பாடுகளும் இடம்பெற்ற ஓர் கேந்திர முக்கியத்துவம் கொண்ட ஓர் பண்ணையாகும்.
இப் பண்ணையினையும் 2009 இறுதி யுத்தத்தின் பின்னர்  இராணுவம் அபகரித்துள்ளது. குறித்த 435 ஏக்கர் பரப்பைக் கொண்ட  பண்ணையில் தற்போது திணைக்களத்திடம் வெறும் 20 ஏக்கர் மட்டுமே உள்ளது . எஞ்சிய 415 ஏக்கர் நிலமும் இன்றுவரையில் படையினரின் பிடியில்தான் உள்ளது. இதனால் விவசாயிகளான நாம் பல நெருக்கடிகளை தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகின்றோம். எனவே விவசாயிகளின் வாழ.வாதாரத்தை பெருக்கும் நோக்கில் குறித்த பண்ணையினை உடன் திணைக்களத்திடம் கையளிக்க வேண்டும் என இன்றைய தினம் ( நேற்று)  கிளிநொச்சி மாவட்ட இரணைமடு விவசாய சம்மேளனக் கூட்டத்துல்  தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இத் தீர்மானத்துனை உடனடியாக உரியவர்களிற்கு அனுப்பி வைப்பது எனவும் அதற்கமைய குறித்த பண்ணை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படாது விட்டால் அடுத்த கட்டம் தொடர்பில் விரைவில் கூடி அது தொடர்பிலும் ஆராய்ந்து உரிய தீர்வைப் பெறுவதற்குரிய வழியில் செயல்படுவது தொடர்பில் ஆராயப்படும். என்றார்.