நாட்டுக்குள்ளேயே விசாரணை மேற்கொண்டு தீர்வுகாண முடியும்

43 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் மற்றும் தற்போது அமைக்க இருக்கும் விசாரணைக்குழுக்களின் அறிக்கைகள் அனைத்தையும் ஆராயந்து பாராளுமன்றம் விரைவாத இது தொடர்பில் தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும்.

அத்துடன் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நாட்டுக்குள்ளேயே  விசாரணை மேற்கொண்டு தீர்வுகாண முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது என பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதியின் ஆலாேசகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆஷுமாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக சனல்4  அலைவரிசை வெளிப்படுத்தி இருக்கும் காணாெளி தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அதனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது தொடர்பாக தேடிப்பார்க்க உயர் நீதிமன்ற முன்னாள்  நீதியரசர் ஒருவருன் தலைமையில் குழுவொன்றை நியமித்திருக்கிறார். அதேபோன்று இதுதொடர்பாக தேடிப்பார்க்க பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றையும் அமைக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று அமைத்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று முன்னான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆணைக்குழ மைத்திருந்தார். இந்த இரண்டு அறிக்கைகளுடன் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக  சனல்4 வெளியிட்டிருக்கும் காணொளி தொடர்பாக தேடிப்பார்க்க ஜனாதிபதி அமைத்திருக்கும் குழு மற்றும் புதிதாக அமைக்க இருக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு இந்த குழுக்களும் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தால் மொத்தமாக 4 அறிக்கைகள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.

இந்த 4 அறிக்கைகளிலும் தெரிவிக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகள் தொடர்பாக ஆராயந்து பாராளுமன்ற இது தொடர்பாக தீரமானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்தும் காலம் தாழ்த்தாமல் இந்த குழுக்கள் விரைவாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

அதேபோன்று முன்னாள் சட்டமா அதிபர் தப்புல லிவேரா, இந்த தாக்குதலின் பின்னணியில் சூத்திரதாரி ஒருவர் இருக்கிறார் என தெரிவித்திருப்பதன் பிரகாரம்,  அந்த சூத்திரதாரி யார் என்பது தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தெரிக்க முடியும். இது ஒட்டுமொத்த நாடும்  தெரிந்துகொள்ள வேண்டிய விடயமாகும். அத்துடன் குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவு முன்னாள் அதிகாரிகள் இதற்கு முன்னர் இடம்பெற்ற பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியம் அளித்துள்ளனர். என்றாலும் அவர்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்க இருந்தால் அமைக்க இருக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க முடியும்.

நல்லாட்சி அரசாங்கம் தோல்வியடைய பிரதான காரணம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலாகும். அதனால் இந்த தாக்குதலின் சூத்திரதாரிகள் யார் என்பதை அறிந்துகொள்ள வேண்டிய தேவை எமக்கும் இருக்கிறது. அதனால் தொடர்ந்தும் இந்த விசாரணைகளை இழுத்தடித்துக்கொண்டிருக்க முடியாது.

அத்துடன்  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை ஒன்றுக்கு செல்லவேண்டும் என பேராயர் மெல்கம் ரன்ஜித் ஆண்டகை உட்பட பலரும் தெரிவித்திருக்கிறார்கள்.  நாட்டுக்குள்ளே விசாரணை மேற்கொண்டு தீர்வுகாண முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. அதனால் பேராயர் உட்பட தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பும் அனைவரும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கருத்துக்களை தெரிவிக்க முடியும். அதேநேரம் விசாரணைகளை விரைவாக மேற்கொண்டு அதன் அறிக்கைகளை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து, இது தொடர்பாக பாராளுமன்றம் விரைவாக தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்றார்.