கிளிநொச்சி பூநகரி குளத்தில் சூரிய மின்சக்தி சேமிப்பு

154 0

நாட்டில் துரித மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு நல்குவதற்காக 50 மெகாவோல்ட் அல்லது அதற்கு அதிகமான இயலளவு கொண்ட மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தித் துறையில் முதலீடுவதற்கு எதிர்பார்க்கின்ற முதலீட்டாளர்களின் விருப்புக் கோரல்களை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, 134 மெகாவோல்ட் மின்சாரத்தை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் கிளிநொச்சி பூநகரி குளத்தில் சூரிய மின்சக்திஃமின்கலச் சேமிப்புத் தொகுதியுடன் கூடிய 700 மெகாவோல்ட் சூரிய மின்னுற்பத்தி நிலையமொன்றை அமைப்பதற்கான முன்மொழிவு யுனைட்டட் சோலர் எனேர்ஜி எஸ் எல் தனியார் கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

1727 மில்லியன் டொலர்கள் மொத்த முதலீட்டுடன் கூடியதும், மற்றும் 100 வீதம் வெளிநாட்டு முதலீடாக உத்தேசிக்கப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதுடன், அதில் 500 மில்லியன் டொலர்கள் உள்ளுர் கருத்திட்டப் பகுதிக்குப் பயன்படுத்துவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

உத்தேசக் கருத்திட்டத்தின் ஒரு பகுதியாக 13.5 மில்லியன்  டொலர்கள் செலவில் கடல்நீர் உட்புகுவதைத் தடுப்பதற்காக பூநகரிக் குளத்தைச் சுற்றி 3 அணைக்கட்டுக்கள் நிர்மாணிக்கப்பட்டு குறித்த குளத்தை புனரமைப்பதற்கும் கம்பனி முன்மொழிந்துள்ளது.

அதற்குப் பதிலாக குறித்த குளத்தின் ஆழமற்ற பகுதியான 1,080 ஏக்கர்களில் 700 மெகாவோல்ட் சூரிய மின்சக்தி நிலையத்தை அமைப்பதற்கு 35 வருடகால குத்தகை ஒப்பந்த அடிப்படையில், குறித்த கம்பனிக்கு வழங்குவதற்கு தற்போது வடக்கு மாகாண சபை, வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் கமநல அபிவிருத்தித் திணைக்களம் போன்றன உடன்பாடு தெரிவித்துள்ளன.

அதற்கமைய, யுனைட்டட் சோலர் எனர்ஜி எஸ் எல் கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவை கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்வதற்கும், குறித்த முன்மொழிவை மதிப்பீடு செய்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காகவும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவொன்றை நியமிப்பதற்கும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.