மக்கள் கொடுத்த ஆதரவையெல்லாம் தீபா அலட்சியப்படுத்தி வருகிறார்

261 0

மக்கள் கொடுத்த ஆதரவை எல்லாம் தீபா அலட்சியப்படுத்தி வருகிறார் என முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சியில் பிளவு ஏற்பட்டது. அப்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்று தமிழகம் முழுவதிலும் இருந்து அ.தி. மு.க. வினர் வலியுறுத்தினர்.

அவர்களில் அ.தி.மு.க. நிர்வாக்குழு உறுப்பினர்களில் ஒருவரும், திருச்சி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சவுந்தரராஜனும் ஒருவர் ஆவார். தீபா தீவிர அரசியலில் ஈடுபடவேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தவரும் அவர்தான்.

இதற்காக திருச்சியில் தீபா பேரவையை தொடங்கி பல்வேறு கூட்டங்களை நடத்தி ஆதரவாளர்களையும் திரட்டினார். ஆனால் கடந்த சில நாட்களாக தீபாவின் நடவடிக்கையில் அதிருப்தி அடைந்த சவுந்தரராஜன் தீபா பேரவையில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.

தீபாவின் தெளிவற்ற அரசியல் பயணம், அவரது கணவர் மாதவன் தனிக்கட்சி போன்ற காரணங்களால் தீபாவின் மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் குறைந்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.இதுதொடர்பாக முடிவெடுக்கும் வகையில் திருச்சியில் நேற்று மாநில அளவிலான ஆலோசனை கூட் டத்திற்கு சவுந்தரராஜன் அழைப்பு விடுத்தார். இதில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் சவுந்தரராஜன் பேசியதாவது:-

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வழியில் அவரது அண்ணன் மகள் தீபா அ.தி.மு.க.வை வழி நடத்துவார் என்று எதிர்பார்த்து தான் தீபா பேரவையை தொடங்கி அவருக்கு ஆதரவாகவும் செயல்பட்டோம்.ஆனால் பேரவை பொறுப்பாளர்களை நியமிப்பதில் குழப்பத்தை ஏற்படுத்தினார். அவ்வாறு நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை சந்தித்து கருத்துக்களை கேட்க மறுத்தும், தவிர்த்தும் வருகிறார். அவர் இயக்கம் தொடங்கியபோது, மக்கள் கொடுத்த ஆதரவை எல்லாம் அலட்சியப்படுத்தி வருகிறார். ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை வெளி உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.
அதிலேயும் முதலில் சந்தேகம் இருப்பதாக கூறிய தீபா பின்னர் சந்தேகம் இல்லை என்று கூறிவிட்டார். தீபா பேரவைக்கு பொறுப்பாளர்களை நியமித்தது தனக்கே தெரியாது என்றும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயலாற்றுவேன் என்றும் மாற்றி, மாற்றி பேசி வருகிறார்.

இதையெல்லாம் தாண்டி தற்போது தீபாவின் கணவர் மாதவன், பேரவையில் தீய சக்தி நுழைந்துவிட்டது என்று கூறுகிறார். அவர் யாரை தீய சக்தி என குறிப்பிடுகிறார் என தெரியவில்லை. எனவே எனது நிலையை விளக்கி இந்த இயக்கத்தில் இருந்து வெளியேறுவதற்காகவும், என்னோடு இணைந்து செயல்பட்ட நிர்வாகிகளை யும் சந்தித்துள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.தங்களின் நிலைப்பாடு குறித்து மாவட்ட அளவில் 5 பேர் கொண்ட குழு அமைத்து தீபாவின் முரண்பாடான அறிவிப்புகள், தற்போதைய நிலவரம் ஆகியவற்றை தீபாவை சந்தித்து தெரிவிக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் சவுந் தரராஜன் நிருபர்களிடம் கூறுகையில், தீபாவின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்துள்ள நாங்கள் தீபா பேரவையில் இருந்து விலகி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம், இன்று (20-ந்தேதி) சென்னையில் அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்கிறோம். அதனை தொடர்ந்து சுமார் 2 ஆயிரம் பேரை பன்னீர்செல்வம் அணியில் இணைக்க உள்ளோம் என்றார்.