இரட்டை இலை எங்களுக்கு கிடைக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது: கே.பாண்டியராஜன்

236 0

இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது என்று கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறு, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை நேற்று மாலை சந்தித்தார். அப்போது இந்திய தேசிய முஸ்லீம் லீக் மாநில தலைவர் ஒய்.ஜவஹர் அலி, அகில இந்திய சமதா கட்சியின் தேசிய செயலாளர் கோஷ் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கோசல்ராமன் ஆகியோர் தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர். தே.மு.தி.க., எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை சேர்ந்தவர்களும் ஆதரவை அளித்தனர்.
கிருஷ்ணகிரி, வேலூர், கடலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தொண்டர்களும் ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்தனர். நெல்லிக்குப்பம் முன்னாள் எம்.எல்.ஏ. துரை அன்பரசன், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் இருந்த முன்னால் எம்.எல்.ஏ. திருச்சி சவுந்தரராஜன் ஆகியோரும் சேர்ந்தனர்.
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- 22-ந்தேதி தேர்தல் கமிஷனரை சந்தித்து எதை வலியுறுத்த இருக்கிறீர்கள்?
பதில்:- 22-ந்தேதி இரு தரப்பினரையும் அழைத்து தங்களுடைய கருத்துகளை தாக்கல் செய்ய கூறி இருக்கிறார்கள். அன்றைய நாளோ அல்லது அதற்கு அடுத்த நாளோ முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
சசிகலா தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது. 2 மாதங்களுக்குள் தேர்தல் கமிஷன் மேற்பார்வையில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் பொதுச் செயலாளருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களுடன் கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் கூட்டு தலைமையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பது உள்பட 5 காரணங்களை முன்வைக்க இருக்கிறோம்.
கேள்வி:- ஒருவேளை இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டாலோ அல்லது உங்களுக்கு அந்த சின்னம் கிடைக்கவில்லை என்றாலோ நீங்கள் எந்த சின்னத்தில் போட்டியிடுவீர்கள்? சேவல் சின்னத்தில் போட்டியிட போவதாக கூறப்படுகிறது. அது உண்மையா?
பதில்:- ஓ.பன்னீர்செல்வம் சொன்னபடி தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை இருக்கிறது. எங்களுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும். இரட்டை இலை சின்னத்துக்கு உரியவர்கள் நாங்கள் தான். எங்களை பொறுத்தவரையில் இரட்டை இலை எங்களுக்கு கிடைக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது.
கேள்வி:- ஓ.பன்னீர்செல்வம் ஆர்.கே.நகரில் எப்போது தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்?
பதில்:- இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பிரசாரத்தை பொறுத்தவரையில் ஏற்கனவே நாங்கள் தொடங்கிவிட்டோம். எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொண்டர்கள் எழுச்சியுடன் வந்தார்கள். ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரம் மற்றும் தேர்தல் அறிக்கை ஆகியவை குறித்து இருநாட்களில் அறிவிப்பு வரும்.
கேள்வி:-யாரும் எனக்கு கிடையாது போட்டி வேட்பாளர் என்று கங்கை அமரன் கூறி இருக்கிறார். அது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
பதில்:- அவருடைய தன்னம்பிக்கையை நாங்கள் போற்றுகிறோம். சசிகலா குடும்பத்தினரால் என்னுடைய சொத்துகள் அபகரிக்கப்பட்டன என்று சொல்லும் அவருடைய பிரசாரம் எங்களுக்கு தான் சாதகமாக இருக்கும். எங்களை பொறுத்தவரையில் சாதகமான ஓட்டு எங்களுக்கு கிடைக்கும். கங்கை அமரன் சசிகலா பற்றி குற்றம் சொல்வது எங்களுக்கும் உடன்பாடு தான்.
கேள்வி:- பணப்பட்டுவாடா பற்றி பா.ஜ.க. குற்றம் சாட்டுகிறது? உங்கள் கருத்து என்ன?
பதில்:- இதுகுறித்து நாங்களும் புகார் தெரிவித்து இருக்கிறோம். தேர்தல் கமிஷன் நடுநிலையாக நடந்து கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆர்.கே.நகரில் ரூ.3 ஆயிரம் டோக்கன் வழங்கி இருக்கிறார்கள். இதுபோல் எங்கு நடந்தாலும் நாங்கள் புகார் தெரிவிப்போம்.இவ்வாறு அவர் பதிலளித்தார்.