குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் எண்ணம் தி.மு.க.வுக்கு கிடையாது: மு.க.ஸ்டாலின்

256 0

மக்கள் தீர்ப்பின் அடிப்படையில் ஆட்சி அமைப்போம் என்றும், குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் எண்ணம் தி.மு.க.வுக்கு கிடையாது என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மார்ச் 18-ந் தேதி கோவையில் நடைபெற்ற விழாவில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேவையற்ற வகையிலே தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது பாய்ந்திருக்கிறார். ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக மட்டும் எதிர்க்கட்சி செயல்படுகிறது என்று பேசியுள்ளார்.

அவருக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், தி.மு.க. நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கத்தான் போகிறது. ஆனால், அது மக்களின் தீர்ப்பின் அடிப்படையில் அமையுமே தவிர, குறுக்கு வழியில் அல்ல. அந்த எண்ணம் ஒருபோதும் தி.மு.க.வுக்கு கிடையாது. அதே நேரத்தில், ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு முதல்-அமைச்சர் பொறுப்பேற்றவரை மாற்றிவிட்டு, அந்த இடத்திற்கு அவசரமாக வரத்துடித்தவர்கள் யார் என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும். அந்த எண்ணம், நீதிமன்ற தீர்ப்பினால் முறியடிக்கப்பட்டு, பரப்பன அக்ரஹார சிறையில் முடங்கியதால்தான், எடப்பாடி பழனிசாமியால் முதல்-அமைச்சராக முடிந்திருக்கிறது.

இதோ இப்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சசிகலா அணியின் வேட்பாளராக போட்டியிட முன்வந்திருப்பவரின் உள்ளக்கிடக்கை என்ன என்பது முதல்-அமைச்சர் பொறுப்பில் உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாக தெரியும். அதனால் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள் என்று அவர் பேசியது, நம் மீதான விமர்சனம் அல்ல என்பதும், அவருடைய ஆதங்கத்தைத்தான் அரசு விழா மேடையில் வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதும் நன்றாகவே புரிகிறது. இதனை வெளிப்படையாக சொல்லும் துணிவின்றி, தி.மு.க.வை வம்புக்கு இழுக்கின்ற வேலைகளை இனியும் தொடராமல், தமிழகம் முழுவதும் குடிப்பதற்காக தண்ணீர்கூட இல்லாமல் தவிக்கும் மக்களின் அவலநிலை நோக்கி கவனத்தை திருப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிப்பட்ட வேதனையான நிலையில், தமிழகத்தின் முதல்-அமைச்சர் பொறுப்பில் இருப்பவர் அண்டை மாநில முதல்வர்களுடனும் அமைச்சர்கள், அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்து குடிநீர் தேவையை நிறைவேற்ற முன்வரவேண்டியது கடமையாகும். அப்படிப்பட்ட எந்த நடவடிக்கையையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் இன்னும் அமைக்கப்படாத சூழ்நிலையில் 5,912 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 60 டி.எம்.சி. கிடைக்கும் அளவுக்கு மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டம் தீட்டி செயல்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டிருப்பதால், அதனிடம் தெரிவிக்காமல் அணை தொடர்பான பணிகளை செயல்படுத்த மாட்டோம் என அந்த மாநில அரசு தெரிவித்திருப்பது செய்தியாக வெளிவந்துள்ளது. அதே நேரத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இதே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் இன்று வரை அதனை செயல்படுத்த கர்நாடகம் தடையாக இருக்கிறது. மத்திய அரசும் தமிழகத்தின் அத்தியாவசிய கோரிக்கையைப் புறக்கணித்தே வருகிறது. கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் நெருங்கிவருவதால், மத்திய அரசின் பார்வையும், அணுகுமுறையும் அந்த மாநிலத்திற்கே சாதகமாக உள்ளது.

காவிரி இறுதி தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை கேரள, கர்நாடக அரசுகள் காவிரி மற்றும் அதன் உபநதிகளின் நீரைத் தடுக்கும் எவ்வித பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தடையாணை பெற வேண்டும். ஆந்திர மாநில அரசும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டிவருகிறது. அதனை தடுக்கவோ, கிருஷ்ணா நீரை பெறவோ எடப்பாடி பழனிசாமி எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

தமிழகத்தின் உரிமைகள் பறிபோகாமல் இருப்பதற்காக, அண்டை மாநில முதல்-மந்திரிகளை சந்தித்து பேசினாரா?. போராடும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அழைத்துச்சென்று கேரள, கர்நாடக முதல்-மந்திரிகளை உடனடியாக சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்தாரா?. விவசாயிகள் இந்த அரசின் செயல்படாத்தன்மையை அறிந்து, டெல்லியில் முகாமிட்டு போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ, தமிழக அரசு 6 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதிச்சுமையில் உள்ள நிலையில், நிறைவேற்றாத திட்டங்களுக்கு அரசு செலவில் விழா நடத்தி, அதில் அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார்.

எனவே உடனடியாக அனுபவமிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரியின் கீழ் ஒரு தனி கமிட்டி அமைத்து அண்டை மாநிலங்களுடன் உள்ள நதிநீர் பிரச்சினைகள் குறித்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக நலன்களையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றும் அவசர நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய முதல்-அமைச்சர் தன் பணிகளில் ஒன்றையாவது செய்திருக்கிறாரா?.

இதையெல்லாம் இந்நேரத்தில் சுட்டிக்காட்டுவதற்கு காரணம், தனது பதவி நாற்காலியைக் காப்பாற்றிக்கொள்ளும் நோக்கத்துடன் எதிர்க்கட்சியான தி.மு.க. மீது வசைபாடும் முதல்-அமைச்சர், தங்களின் ஆட்சி பற்றி தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை உணர வேண்டும் என்பதற்காகத்தான். மக்கள் நலன் பற்றி கொஞ்சமும் அக்கறையில்லாத ஓர் ஆட்சி தமிழகத்தில் நடைபெறுவது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட அவமானமாகும். குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் இருப்பவரின் பெயரையும், குற்ற வழக்குகளில் அபராதம் விதிக்கப்பட்டவரின் பெயரையும் மாண்புக்குரிய சட்டமன்றத்தில் உச்சரிப்பது என சட்டத்துக்கும், மக்களுக்கும் விரோதமாக நடைபெறும் இந்த ஆட்சியால், மக்களின் தாகம் தீர்க்க ஒரு குவளை தண்ணீர்கூட தரமுடியவில்லை என்பதுதான் உண்மை நிலவரம்.

இத்தகைய ஆட்சியை மாற்ற வேண்டிய வேலையை தி.மு.க. செய்ய வேண்டியதில்லை. மக்களே விரைவில் மேற்கொள்வார்கள். தி.மு.க.வினராகிய நாம் மேற்கொள்ள வேண்டியது, மக்களின் உரிமைக் குரலுக்குத் துணை நிற்பதும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற போராட்டக்களம் காண்பதும்தான். மக்கள் பணியில் தொடர்ந்து செயலாற்றுவோம். மாற்றத்தை விரைவில் உருவாக்குவோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.