எமது ஆதரவு இல்லாமல் ஜனாதிபதியால் தனித்துச் செயற்பட முடியாது

148 0

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்தாலும் பொதுஜன பெரமுனவின் ஆதரவு இல்லாமல் அவரால் தனித்து செயற்பட முடியும்.

அரச நிர்வாகம் தொடர்பில் பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குகிறார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் நாட்டில் ஜனநாயக போராட்டம் என்று முன்னெடுக்கப்பட்ட அரசியல் சூழ்ச்சியின் பின்னணியை மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

கட்சியை பலப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொதுஜன பெரமுனவின் அடிப்படை கொள்கைகளை முன்னிலைப்படுத்தி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்தாலும் அவர் எமது ஆதரவு இல்லாமல் தனித்து செயற்பட முடியாது. பாராளுமன்றத்தில் பொதுஜன பெரமுனவுக்கே பெரும்பான்மை பலம் உள்ளது. எமது ஆதரவு இல்லாமல் எந்த தீர்மானத்தையும் எடுக்க முடியாது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையில் தொடர்ச்சியாக இரகசிய பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது. அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்வது தொடர்பில் பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குகிறார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாங்கள் தெரிவு செய்ததால் அவர் எமது ஆலோசனைக்கு அமைய செயற்பட வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் குறிப்பிடவில்லை. இருப்பினும் பெரும்பான்மை பலம் எம்மிடம் உள்ளதால் அரச நிர்வாகம் தொடர்பில் ஆலோசனை வழங்கும் அதிகாரம் எமக்கு உண்டு  என்றார்.