மொராக்கோ ஆறு தசாப்த காலத்தில் சந்தித்துள்ள பாரிய பூகம்பத்தில் உயிர்தப்பியவர்களை தேடிக்கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மரகெச்சில் உள்ள மலைகளிற்கு அருகில் உள்ள கிராமங்கள் முற்றாக அழிந்துள்ளதுடன் 2000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் உயிர் தப்பியவர்களை மீட்பதற்கான நடவடிக்கைள் தீவிரமாக இடம்பெறுகின்றன.
வெள்ளிக்கிழமை இரவு பூகம்பம் தாக்கிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவும் பெருமளவு பொதுமக்கள் வீதிகளில் உறங்கியுள்ளனர்.

இதேவேளை அட்லஸ் மலையின் மிக உயரமான பகுதிகளில் உள்ள கிராமங்களை சென்றடைவதில் மீட்பு பணியாளர்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
மலைப்பாறை துண்டுகள் வீழ்ந்து வீதிகளை மூடியுள்ளதால் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இடிபாடுகளிற்கு கீழ் இன்னமும் பலர் சிக்குண்டுள்ளனர் மக்கள் தங்கள் பெற்றோர்களை தேடுகின்றனர் என அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
பல வீதிகள் மூடப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
மௌலாய் பிரஹீம் என்ற இடத்தில் சேறுநிரம்பிய கால்பந்தாட்ட மைதானத்தில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன இரவில் வீதிகளில் தங்கியிருந்த பொதுமக்கள் அவற்றில் வசிக்க தொடங்கியுள்ளனர்.
2012 பேர் உயிரிழந்துள்ளனர் 2059 பேர் காயமடைந்துள்ளனர் அவர்களில் 1404 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என மொராக்கோ தெரிவித்துள்ளது.

மொராக்கோ மூன்று நாள் துக்கதினம் அறிவித்துள்ளது.ஞாயிற்றுக்கிழமை நாடாளாவிய ரீதியில் மசூதிகளில் உயிரிழந்தவர்களிற்காக தொழுகைகளில் ஈடுபடுமாறு மன்னர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
300000 த்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

