எந்தவொரு ஊதியமும் தேவையில்லை என்ற நிபந்தனையோடுதான் பணியை ஒப்புக்கொள்கிறேன் – ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு

144 0

நாங்குநேரி சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே சாதி, இனவேறுபாடுகளால் உருவாகும் வன்முறைகளைத் தவிர்த்து, நல்லிணக்கம் பேணுவதற்கான வழிமுறைகளை வகுத்து அரசுக்கு ஆலோசனை வழங்க ஓய்வு பெற்றஉயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான பணியில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த நீதிபதி கே.சந்துருவிடம், ‘‘இதுவரை நீ்ங்கள் தலைமை வகிக்கும் ஆணையங்களுக்கு எந்தவொரு ஊதியமும் தேவையில்லை என மறுத்து விட்டீர்கள் எனக் கூறப்படுகிறதே?’’ என்று ‘இந்து தமிழ் திசை’ சார்பில் கேட்டதற்கு அவர் கூறியதாவது:

கடந்த 2013 மார்ச் மாதம் உயர் நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றேன். அன்று முதல் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றக்கூடாது என முடிவு செய்தேன். கடந்த 30 ஆண்டுகளாக வழக்கறிஞராகவும், 7 ஆண்டுகளாக நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளேன். அந்த அனுபவம் வீணாகி விடக்கூடாது என்பதற்காக சில நாளிதழ்களில் தொடர்ச்சியாக சட்ட விளக்கம் கொடுத்து வந்தேன்.

அதன்பிறகு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2016-ல் குற்றவியல் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் கட்டப் பஞ்சாயத்து நடத்துவது குறித்து ஆராய்ந்து அறிக்கை தர எனது தலைமையில் குழு அமைத்தது. அந்தக் குழுவின் அறிக்கையை 2016 நவம்பரில் அளித்தேன். அதற்கான செலவினங்களுக்கு எந்த தொகையும் பெறவில்லை.

ஆனால், இன்சூரன்ஸ் கம்பெனிகளிடம் வழக்கறிஞர்கள் மோசடியாக இழப்பீடு கோருவதை தடுக்க தக்க ஆலோசனை வழங்க உயர் நீதிமன்றம் என்னை ஒரு நபர் குழுவாக கடந்த 2018-ல் நியமித்தது. அந்தகுழுவின் இறுதி அறிக்கையை 2019 ஆகஸ்ட்டில் சமர்ப்பித்தேன். இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு அந்த வழக்கின் மூலமாக மிகப்பெரிய லாபம் கிட்டியதால் நீதிபதியின் வற்புறுத்தலின் காரணமாக எனக்கான நிர்வாக செலவுக்கான தொகையைப் பெற்றுக் கொண்டேன். அது தவிர வேறு எந்தவொரு அரசு பணிக்கும் நான் ஊதியம் பெறக்கூடாது என முடிவு செய்தேன். அதை இன்று வரை செயல்படுத்தி வருகிறேன்.

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ள விவசாய மற்றும் தோட்டக்கலை தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான கட்டண விகித நிர்ணயம் தொடர்பாக என் தலைமையி்ல் குழு அமைத்தார்கள். அதன் அறிக்கையை 2020 செப்டம்பரில் அரசுக்கு சமர்ப்பித்தேன். அதற்காக எந்த பணமும் பெறவில்லை.

ஆத்ம திருப்தி அளிக்கின்றன: அதேபோல ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது பற்றி ஆலோசனை வழங்க கடந்த 2022 ஜூனில் தற்போதைய திமுக அரசு என் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இரண்டே வாரத்தில் அதற்கான அறிக்கையை தயார் செய்து தமிழக முதல்வரிடம்அளித்தேன். அதற்கும் எந்த சிறப்பு ஊதியமும் பெற்றுக் கொள்ளவில்லை.

மேலும், சிறார் அரசு இல்லங்களை ஒழுங்குபடுத்தவும் அதற்கான சீர்திருத்தங்களை பரிந்துரைக்கவும் என்னை ஒரு நபர்குழுவாக அரசு கடந்த 2023 ஏப்ரலில் நியமித்தது. அதற்கான இறுதி அறிக்கையை இம்மாத இறுதியில் சமர்ப்பிக்க உள்ளேன். இதுபோன்ற பணி எனக்கு ஆத்ம திருப்தியளிப்பதால் அதற்கும் ஊதியமோ அல்லது நிர்வாகச் செலவோ தேவையில்லை என மறுத்துவிட்டேன்.

தற்போது நாங்குநேரி சம்பவம் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி, கல்லூரிகளில் சாதி, மோதல்களை தடுத்து நல்லிணக்கத்தை உருவாக்க தகுந்த ஆலோசனைகளை வழங்க எனது தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. எனக்கு ஊதியம் தேவையில்லை என்ற நிபந்தனையுடன் தான் அந்தப்பணியையும் ஏற்றுக்கொண்டேன். தமிழக முதல்வரே என்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.

நான் ஓய்வு பெற்றபிறகு அரசிடமிருந்து ஊதியம் பெற வேண்டும் என நினைத்திருந்தால் ஒவ்வொரு ஆணையத்துக்கும் மாதம் ரூ.2.5 லட்சத்தை ஊதியமாக பெற்று இருக்க முடியும். எனக்கு நீதிபதி பதவிக்கான ஓய்வூதியம் கிடைக்கிறது. அதுபோதும். செல்ல வேண்டிய இடங்களுக்கு வாடகை ஆட்டோ அல்லது கார்களில் செல்கிறேன். நெடுந்தூர பயணம் என்றால் ரயில்களில் செல்கிறேன்.

அரசிடமிருந்து எந்தவொரு சிறப்பு ஊதியமோ அல்லது செலவுத்தொகையோ பெறாமல் பொது சேவையாற்ற முடியும்என்பதை நிரூபித்து வருகிறேன். என்னைப்போல மற்ற ஓய்வூதியதாரர்களும் பொதுசேவையாற்ற முன்வரவேண்டும் என்பதே எனது விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.