விருதுநகரில் பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சி திடீர் ரத்து

136 0

விருதுநகரில் பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் நடத்த திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தநிலையில் அமைச்சர் உதயநிதி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

விருதுநகரில் அமைச்சர் உதயநிதி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அரசு துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நாளை (செப்.7) நடைபெற இருந்தது. காலையில் நடைபெறும் இக்கூட்டத்தைத் தொடர்ந்து, விருதுநகர் கல்லூரி சாலையில் தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபம் அருகே திமுக மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து, நகராட்சி ஆணையர் இல்லத்தின் அருகே உள்ள திடலில் மாவட்ட இளைஞரணி செயற்குழுக் கூட்டமும் நடைபெற இருந்தது.இதற்காக, கல்லூரி சாலையில் உள்ள இரு திடல்களிலும் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணி கடந்த 5 நாட்களாக நடந்து வந்தது. இந்நிலையில், அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் திடீரென ரத்து செய்யப்பட்டன.

இதுகுறித்து திமுகவினர் கூறுகையில், மழை அறிவிப்பு காரணமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம் மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், மற்றொரு தேதியில் இந்நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

சமீபத்தில் சனாதன தர்மம் பற்றி அமைச்சர் உதயநிதி பேசியது தொடர்பாக, இந்து அமைப்புகள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அவர் பங்கேற்க இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.