பரந்துபட்ட கூட்டணியை உருவாக்க அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை

133 0

பரந்துபட்ட கூட்டணியை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு எடுத்த தீர்மானங்களின் பிரகாரம், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியால் எதிர்காலத்தில் கட்டியெழுப்பப்படவுள்ள பரந்துபட்ட அரசியல் கூட்டணிக்கு ஆதரவைப் பெறும் நோக்கில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் அரசியல் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை தொடரின் மற்றுமொரு கலந்துரையாடல் திங்கட்கிழமை (04) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் இலங்கை மக்கள் கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசங்க நவரத்ன உள்ளிட்ட அக்கட்சியின் பிரதிநிதிகள் குழுவினரும் கலந்துகொண்டனர்.

தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் நாடு எதிர்நோக்கும் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதோடு, எதிர்காலத்தில் எதிர்க்கட்சிகளின் பரந்த அரசியல் கூட்டணியை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அசங்க நவரத்ன, எதிர்காலத்தில் இந்த கலந்துரையாடல்களை நடத்துவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார். இவ்வாறான ஒரு பரந்த கூட்டணியில் இணையுமாறு இலங்கை மக்கள் கட்சிக்கு அழைப்பும் விடுக்கப்பட்டது.