அமைச்சர் மஸ்தானின் மகன், மருமகனின் கட்சி பதவி பறிப்பு – பல்வேறு புகார்களின் எதிரொலியாக திமுக தலைமை நடவடிக்கை

134 0

பல்வேறு புகார்களின் எதிரொலியாக அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார் அலி மற்றும் மருமகன் ரிஸ்வான் ஆகியோரின் கட்சிப் பதவிகளை பறித்து திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சராகவும் செஞ்சி மஸ்தான் பதவி வகித்து வருகிறார். இவரது மகன் மொக்தியார் அலி. திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து இவர் விடுவிக்கப்பட்டு, இவருக்குப் பதிலாக பெரும்புகை கிராமத்தைச் சேர்ந்த ரோமியன் என்பவர் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளராக இருந்து வந்த மஸ்தானின் மருமகன் ரிஸ்வான் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பள்ளியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஷேக்வாகித் நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.