“சனாதனம் குறித்து நான் பேசியதில் தவறில்லை. பேசக் கூடாது என்றால் திரும்ப திரும்ப பேசுவேன்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சனாதனம் குறித்து நான் பேசியதில் தவறில்லை. நான் பேசியதில் தவறு இல்லாதபோது, எதற்கு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்? சனாதனத்தில் பெண்கள் அடிமையாக வைக்கப்பட்டிருந்தனர். கணவன் இறந்தால் உடன்கட்டை ஏற வேண்டும், வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன.
திராவிட மாடலால் அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.காலை உணவு திட்டம், பெண்களுக்கான புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் ஆட்சி கொண்டு வந்துள்ளது. அனைத்து மதங்கள் குறித்தும் பேசினேன். இந்து மதம் குறித்து மட்டும் பேசவில்லை. நான் பேசக் கூடாது என்றால் திரும்ப திரும்ப பேசுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று, 115 பேருக்கு ரூ.6 கோடியே 38 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அமைச்சர்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். ஆட்சியர் கி.செந்தில்ராஜ், காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா, ஜீ.வி.மார்க்கண்டேயன், மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ் குமார் பங்கேற்றனர்.

