குற்றங்கள் மற்றும் ஊழலற்ற நாடொன்றை ஏற்படுத்த இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்

140 0

மோசடியாக சொத்துக்களை சம்பாதித்து வெளிநாடுகளில் வைப்பிலிட்டுக்கும் நபர்களின் பணத்தை மீள பெற்றுக்கொள்வதற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் காரியாலயம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் அந்த நடவடிக்கையை எதிர்வரும் சில தினங்களில் ஆரம்பிப்போம் என நீதி, சிறைச்சாலைகள் நடவடிக்கை மற்றும்  அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

 

அவ்வாறன முறையில் பணம் சம்பாத்திக்கொண்டு வெளிநாடுகளில் வைப்பிலிட்டிருக்கும் நபர்களின் பணத்தை மீள பெற்றுக்கொள்வது தொடர்பாக  உலக வங்கி சார்பாக போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் காரியாலயம்  நடவடிக்கை எடுப்பதாகவும் புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் இந்த மாதம் 15ஆம் திகதி முதல் செயல்வலுப்பெறுவதுடன் அவ்வாறான நபர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க புதிய ஊழல் எதிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவுக்கு முடியுமாகிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

நீதி அமைச்சர்  மற்றும் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் காரியாலயத்தின் தெற்காசிய பிராந்தியத்தின் பிரதிநிதி மேர்கன் டெக்சேரா ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று நேற்று நீதி அமைச்சில் இடம்பெற்றது. இதன்போதே அமைச்சர் இந்த விடயங்களை தெரிவித்தார்.

இதுதொடர்பாக அமைச்சர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

திருடப்பட்ட சொத்துக்களை மீள பெற்றுக்கொள்வதற்காக உலக வங்கி மற்றும் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் காரியாலயத்துடன் இணைந்து செயற்படுகின்ற ஸ்டார் முறைமைக்கு அமைய மோசடியான முறையில் சொத்துக்களை சம்பாதித்து வெளிநாடுகளில் வைப்பிலிட்டிருக்கும் நபர்களின் பணத்தை மீள பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.

போதைப்பொருள், குற்றங்கள், ஊழல் மற்றும் பயங்கரவாதமற்ற உலகை பாதுகாத்தல், உலக சமாதானத்தை பாதுகாத்தல் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பங்களிப்பு செய்தலை நோக்காக்கொண்டு 1997ஆம் ஆண்டு போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் காரியாலயம் ஸ்தாபிக்கப்பட்டது.

குற்றங்கள் இடம்பெறுவதை தவிர்ப்பதற்காக நாட்டில் செயற்படும் நீதிமன்ற நடவடிக்கை, ஊழலை கட்டுப்படுத்துவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ள புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாகியவர்களை புனர்வாழ்வளிப்பதற்காக செயற்படும் புனர்வாழ்வு செயற்பாடுகள் தொடர்பாகவும் அமைச்சர் இதன்போது தெளிவுபடுத்தினார்.

இலங்கையில் குற்றங்கள் மற்றும் ஊழலை கட்டுப்படுத்துவதற்கு இதுவரை பல  வேலைத்திட்டங்கள் செயற்படுகின்ற நிலையில், எதிர்காலத்தில் மேலும்  இந்த வேலைத்திட்டங்களை உறுதியுடன் செயற்படுத்துவதற்கும் குற்றங்கள் மற்றும் ஊழல் அற்ற நாடொன்றை ஏற்படுத்துவதற்காக தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் இலங்கைக்கு வழங்குவதாக போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் காரியாலயத்தின் தெற்காசிய பிராந்தியத்தின் பிரதிநிதி இதன்போது தெரிவித்தார் என நீதி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.