எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து : இடைக்கால நட்ட ஈட்டை பெற்றுக்கொள்ள அரசாங்கம் இணக்கம்

51 0

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஏற்புடையதான இடைக்கால நட்ட ஈட்டை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் தனது இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளது.   

அது தொடர்பான தேவையான அறிவித்தல்களை கப்பலின் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் சட்டத்தரணிகள் நிறுவனத்துக்கு எழுத்து மூலம் அனுப்புவதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை சமர்ப்பித்திருக்கும் இடைக்கால நட்டஈட்டு அறிக்கைகளுக்கமைவாக இந்த இடைக்கால நட்டஈடு பெற்றுக்கொள்ளப்பட இருக்கிறது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான இடைக்கால நட்டஈடாக 8 இலட்சத்து 78 ஆயிரம் டொலர் மற்றும் 16 மில்லியன் ரூபா கடல் சுற்றுச் சூழல்  பாதுகாப்பு அதிகார சபையினால் கோரியிருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த இடைக்கால நட்டஈட்டை செலுத்துவதற்கு கப்பல் நிறுவனத்தின் காப்புறுதி கூட்டுத்தாபனம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் இதற்கு முன்னர் தங்களது விருப்பத்தை தெரிவித்திருந்தன.

கடந்த வாரம் சிங்கப்பூரில் இடம்பெந்ந  இது தொடர்பான கலந்துரையாடலின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக இரண்டு தரப்பினரும் இந்த இணக்கப்பாட்டுக்கு வந்திருந்தனர்.

அத்துடன் இடைக்கால நட்டஈடாக வழங்கப்படும் இந்த தொகை, கப்பல் தீப்பற்றியதால் பாதிக்கப்பட்ட மீனவ சமூகங்கத்துக்கும் கடல் சுற்றுச் சூழல்  பாதுகாப்பு அதிகாரசபைக்கும் வழங்க இருப்பதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.