படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக சிறுமியை நாய் போல கட்டிப்போட்டு சாகவிட்ட ஜேர்மன் பெண்ணுக்கு சிறை

128 0

சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த சிறுமியை அடிமையாக வைத்திருந்து, கொதிக்கும் வெயிலில் நாயைப் போல சங்கிலியால் கட்டிப்போட்டு, தண்ணீர் கொடுக்காமல் சாக விட்ட பெண் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இன்னமும், உலகின் ஏதாவது ஒரு பகுதியில், ஒரு இனத்தவர்கள் மற்றவர்களை கொடுமைப்படுத்துவதும், அவர்கள் சார்ந்த இனத்தின் அடிப்படையில் அவர்களை அழித்தொழிக்க விழைவதும், அடிமைகளாக வைத்திருக்க முயல்வதும் வேதனைக்குரிய விடயம்தான்.

அவ்வகையில், ஈராக்கில் வாழும் யாஸிடி என்ற இனத்தைச் சேர்ந்தவர்களை, ஐ எஸ் அமைப்பினர் அழித்தொழிக்க விழைந்தனர். சுமார் 5,000 ஆண்கள் படுகொலை செய்யப்பட்டார்கள், 7,000 பெண்களும் சிறுமிகளும் பாலியல் அடிமைகளாக ஆக்கப்பட்டார்கள்.அப்படி விற்கப்பட்ட நோரா என்ற ஒரு யாஸிடி இனப்பெண்ணையும், அவரது மகளையும் அடிமைகளாக வாங்கியவர்கள்தான் ஜேர்மனியைச் சேர்ந்த ஜெனிபர் (Jennifer Wenisch, 32) என்ற பெண்ணும், அவரது கணவரான ஈராக்கைச் சேர்ந்த Taha Al-Jumailly (29) என்ற நபரும்.

ஜெனிபர், ஐ எஸ் அமைப்பில் சேருவதற்காக ஜேர்மனியிலிருந்து சிரியாவுக்குச் சென்றவர் ஆவார். பிறகு, தம்பதியர் ஈராக்குக்கு வந்து அங்கு வாழ்ந்துவந்த நிலையில், ஒரு நாள் உடல் நலமில்லாத அந்த ஐந்து வயதுச் சிறுமி, நோராவின் மகள், படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டிருக்கிறாள்.

உடனே, அவளை 122 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலில் நாய்ச் சங்கிலியால் கட்டிப்போட்டிருக்கிறார்கள் ஜெனிபரும் அவரது கணவரும். தாகத்தால் தவித்து அந்தக் குழந்தை, தண்ணீர் தண்ணீர் என கதறியும், அவளுக்கு தண்ணீர் கூட கொடுக்கப்படவில்லையாம்.

ஏற்கனவே உடல் நலமில்லாதிருந்த அந்தக் குழந்தை, தாகத்தில் தவித்து உயிரிழந்துவிட்டாள். இந்தக் கொடுமையை ஜெனிபர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்.

2021இலேயே தண்டனை விதிக்கப்பட்டும், தனது தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார் ஜெனிபர். ஆனால், அவரது மேல்முறையீட்டு மனுவை நிராகரித்துவிட்டது நீதிமன்றம்.

Munich நகர நீதிமன்றம் ஒன்று ஜெனிபருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்த நிலையில், தற்போது அவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

மகளுடைய நிலைமையைக் கண்டு கதறிய நோராவின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியும் இருக்கிறார் ஜெனிபர்.சிரியாவுக்குச் சென்று, ஐ எஸ் அமைப்பில் சேர்ந்த ஜெனிபர், அந்த அமைப்பில் பெண்களின் உடைக் கட்டுப்பாடுகள், பொது இடத்தில் நடந்துகொள்ளும் முறை, மற்றும் மது மற்றும் புகையிலை பயன்பாட்டைத் தடுத்தல் ஆகிய பொறுப்புக்களை, AK-47 துப்பாக்கி, கைத்துப்பாக்கி முதலான ஆயுதங்கள் ஏந்தி கண்காணிக்கும் பொறுப்பை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.