பெருந்தோட்ட பாடசாலைகளில் வெற்றிடமாக உள்ள கணிதம் விஞ்ஞானம், ஆங்கில பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர் பிரச்சினைக்கு உடனயாக தீர்வு காணும் முகமாகவும் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. மலையகத்தில் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவின் எண்ணத்திற்கு அமைவாக தரம் உயர்த்தி அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் 25 பாடசாலைகளில் நிலவும் கணிதம், விஞ்ஞானம், ஆங்கில ஆசிரியர் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் முகமாகவும் மேற்படி பட்டதாரி ஓய்வு பெற்ற ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் மலையக தோட்ட பாடசாலைகளுக்கு மாத்திரம் இணைந்துக் கொள்ள அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளது.
இந்த ஆசிரியர்களை மாகாண சபைகளின் ஊடாக தெரிவு செய்வதற்கான சுற்று நிரூபத்தை கல்வி அமைச்சு மாகாண சபைகளுக்கு அனுப்பி உள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கையில் எந்த ஒரு பகுதியிலும் இருந்து கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் கற்பிக்க கூடிய ஓய்வு பெற்ற பட்டதாரிகள் மாகாண சபை ஊடாக விண்ணபிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
ஹட்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இந்த தகவலை வௌியிட்டார். இங்கு தொடந்து உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர். இலங்கையில் உள்ள பாடசாலைகளில் பல தற்போது நூற்றாண்டு விழா கொண்டாடிக் கொண்டு இருக்கின்றன.
ஆனால் மலையத்தில் சில பாடசாலைகள் தற்போது தான் வெள்ளி விழா கொண்டாடிக் கொண்டு இருகின்றன. இதற்கு காரணம் எமது மலையத்தின் கல்வி 25 வருடங்கள் பின்னோக்கி இருப்பதே காரணம். இதனை முறியடிக்க வேண்டியது கட்டாயமான ஒன்றாகும். இதற்கு மலையத்தில் உள்ள புத்திஜீவிகள் சிந்தித்து சமூகத்தின்பால் செயற்பட வேண்டும்.
தற்போதைய அரசாங்கம் இதனை கருத்திற் கொண்டு செயற்பட்டு வருகின்றது. நான் இந்த மலையக மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்றவன் அதனால் தான் இந்த அமைச்சு எனக்கு கிடைத்துள்ளது. இருந்தும் எனது அமைச்சின் சேவைகள் அனைத்தும் மலையத்திற்கு மாத்திரம் மட்டுபடுத்தபட்டாக இருக்க முடியாது. நாடு முழுவதும் சேவை செய்ய வேண்டும். எனது அமைச்சு குறிப்பாக இலங்கையில் உள்ள அனைத்து தமிழ்மொழி மூலமான பாடசாலைகளின் அபிவிருத்திக்கு பொறுப்பானதாக இருகின்றது என தெரிவித்தார்.

