கோவை மேயரின் குடும்பத்தின் மீதான புகாரை ஆராய்ந்து விசாரணை நடத்த வேண்டும்: வானதி சீனிவாசன்

187 0

கோவை மேயரின் குடும்பத்தின் மீதான புகார் குறித்து உண்மையை ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வருக்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக நிர்வாகி இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஓணம் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட வானதி சீனிவாசன், அங்கிருந்தவர்களோடு நடனம் ஆடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

இந்த நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறியதாவது: தமிழக முதல்வர் மலையாளத்தில் ஓணம் வாழ்த்து தெரிவித்ததை வரவேற்கிறோம். ஆனால், தீபாவளிக்கும் அவர் வாழ்த்து கூற வேண்டும். அனைவருக்குமான முதல்வராக அவர் இந்த ஆண்டு தீபாவளிக்காவது வாழ்த்து தெரிவிப்பார் என எதிர்பார்க்கிறோம்.

கோவை மேயரின் குடும்பத்தின் மீது அளிக்கப்பட்ட புகார் மீது மாநில அரசு தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே திமுக நிர்வாகிகளாகட்டும், மக்கள் பிரதிநிதிகளாகட்டும், அவர்கள் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் மக்களை மிரட்டுவது, சட்டத்தை தங்களுக்கு சாதகமாக வளைப்பது என்பது சர்வ சாதாரணமாக நடக்கிற விஷயம்.

கோவை மேயர் விஷயத்தில் மாநிலத்தின் முதல்வர் விரைவாக நடவடிக்கை எடுப்பதன் மூலம், சாதாரண மக்களும் சட்டத்தின் பலனை பெற முடியும் என்பதை பார்க்க முடியும். இந்த விஷயத்தில் உண்மையை ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை கட்சி சார்பற்றது.

யாருக்கு எதிராக ஆதாரங்கள், சாட்சியங்கள் இருக்கிறதோ அவர்கள் மீது மத்திய அரசின் ஏஜென்சிகள் நடவடிக்கை எடுக்கிறார்கள். பாஜகவுக்கும் மத்திய ஏஜென்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.