கேப்பாப்புலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பல்பேறு பாதிப்புக்கள்

240 0

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் இராணுவத்தினால் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 19 நாட்களாக இரவு பகலாக நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் உடல் ரீதியில் மோசமான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ள அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதுவரை உடல்நலக்குறைவு, திடீர் மயக்கம் போன்றவற்றினால் 5 ற்கும் மேற்பட்டவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள சிறுவர்கள் ஒரு வகையான காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் உடல் ரீதியில் சோர்வடைந்து காணப்படுகின்ற போதும், தமது நிலங்கள் விடுவிக்கப்பட்டு, காணிகளுக்குள் கால் பதிக்காமல் வரை போராட்டக் களத்தில் என்ன நடந்தாலும், எந்த வகையான இழப்புக்கள் ஏற்பாட்டாலும், போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

கேப்பாப்பிலவில் இராணுவத்தினால் 138 குடும்பங்களுக்குச் சொந்தமான 482 ஏக்கர் காணிகள் இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காணியை ஆக்கிரமித்து வைத்துள்ள இராணுவத்தினர் அக் காணிகளில் பாரிய படைமுகாங்களை அமைத்து வைத்துள்ளனர்.

குறித்த காணியின் உரிமையாளர்கள் தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 19 நாட்களாக குறித்த இராணுவ முகாம் முன் நில மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து இரவு பகலாக மழை, வெய்யில், பணிக்கு மத்தியிலும் சிறிய கூடாரம் ஒன்றினை அமைத்து அதனுள் இருந்து போராடி வருகின்றார்கள்.

இவ்வாறு தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு வடக்கில் மட்டுமல்லாமல், தென்னிலங்கையிலும் உள்ள பொது அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்து போராட்டத்திலும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் பல்கலைக்கழக மாணவர்களும் இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, போராட்டத்திலும் கலந்து கொண்டு வலுச் சேர்த்துள்ளனர்.

முழு வீச்சில் நில மீட்புக்காக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், உரிய சுகாதார வசதிகள் மற்றும் இதர வசதிகள் அற்ற நிலையில் போராட்டத்தில் உள்ள மக்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக திடீர் மயக்கம், சுகயீனம் காரணமாக 5 ற்றும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றும் உள்ளனர்.

இதுதவிர போராட்டத்தில் ஈடுபடும் சிறுவர்களை ஒரு வகை காய்ச்சல் பீடித்துள்ளது. இதனால் அங்குள்ள சிறுவர்களுடைய நிலமை மேசமடைந்து வருகின்றது.

குறித்த போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரமுன்னர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மக்கள் தமது கொட்டகைகளுக்கு அருகில் இருந்த மர நிழல்களின் கீழ் அமர்ந்திருந்தும், உறங்கியும் போராட்டத்தினை தொடர்ந்திருந்தார்கள்.

இருப்பினும் நீதிமன்றம் குறித்த கொட்டகையினை விட்டு வெளியில் நடமாடாமல் அதற்குள்ளேயே இருந்து போராட்டத்தினை நடத்துமாறு மக்களுக்கு அறிவித்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறிய கொட்டகைக்குள்ளேயே அடங்கிய நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் அவர்களுக்கு இடையில் நோய் தொற்றும் நிலையும் அதிகரித்துள்ளது.

இருப்பினும் நேற்றும் நீதிமன்ற உத்தரவினை மதித்து அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது பூர்வீக காணிகளுக்குள் கால் பதிக்கும் வரைக்கும் எந்த சவால்கள் வந்தாலும் தாம் எதிர் கொள்ள தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.