சிங்கப்பூருடன் ஏற்படுத்திய இணக்கப்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை சாகலவுக்கு வழங்க நடவடிக்கை

147 0

சிங்கப்பூருடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் பேச்சுவாரத்தைகளின் முன்னேற்றங்களை குறித்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர்களிடம் கையளிக்கும் வரை , அவற்றை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை ஜனாதிபதி அலுவலகப் பிரதானி சாகல ரத்நாயக்கவிடம் ஒப்படைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்திருக்கின்றார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டு நிர்மாணிக்கப்படவுள்ள காற்று மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டங்களை நவீன தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி சிங்கப்பூருக்கு அனுப்புவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிங்கப்பூர் விஜயத்தின் போது அவதானம் செலுத்தப்பட்டது.

சிங்கப்பூரில் ஜனாதிபதி நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பான விவகாரங்களை உரிய அமைச்சுக்களுக்கு ஒப்படைக்கும் வரை அவற்றை ஜனாதிபதியின் அலுவலகத்தின் கீழ் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே காற்றாலை மற்றும் சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்து பரிமாற்றம் செய்வது குறித்து எதிர்காலத்தில் கலந்துரையாடப்பட உள்ளது.

சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையிலான காலநிலை மாற்றம் தொடர்பான பணிகளை சுற்றாடல் அமைச்சுக்கு மாற்றும் வரை ஜனாதிபதி அலுவலகம் முன்னெடுக்கும். உத்தேச சிங்கப்பூர்-இலங்கை வர்த்தக ஒப்பந்தமும், இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பும் அவ்வாறே இடம்பெறவுள்ளது.

சிங்கப்பூரில் கட்டுமானத் துறையில் திறமையான தொழிலாளர்களுக்கு அதிக தேவை காணப்படுவது இனங்காணப்பட்டதையடுத்து , தகுதி வாய்ந்த தாதியர் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களை அந்நாட்டுக்கு அனுப்புவது குறித்து ஜனாதிபதி தனது சிங்கப்பூர் விஜயத்தின் போது கலந்துரையாடியுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கு இந்த பணி ஒப்படைக்கப்படும் வரை, ஜனாதிபதி அலுவலகப்பிரதானி சாகல ரத்நாயக்க அவற்றை முன்னெடுத்துச் செல்வார். இந்த விடயத்தில் சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் இணக்கம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.