நல்லிணக்க முன்னேற்றம் குறித்த அறிக்கை விரைவில் ஐ.நாவுக்கு அனுப்பப்படும்

171 0

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உள்ளடங்கலாக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பான விளக்க அறிக்கையை வெகுவிரைவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிவைக்கவிருப்பதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அதனை முன்னிறுத்திய நடவடிக்கைகளை இலங்கை ஆரம்பித்துள்ளது.

அதன் ஓரங்கமாக வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் இதுவரையான காலமும் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை உள்ளடக்கிய விரிவான அறிக்கை வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் நடவடிக்கை குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில் இவ்வறிக்கையை சமர்ப்பிப்பதாக இலங்கை அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்த போதிலும், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அவ்வாண்டிலேயே இயங்க ஆரம்பித்தமையினால் அறிக்கையை சமர்ப்பிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையிலேயே எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்பதாக இவ்வறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகிய கட்டமைப்புக்களின் செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கும் வகையிலான விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டுவருவதாகவும், இதில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பற்றிய விபரங்களை உள்ளடக்குவது பற்றி ஆலோசித்துவருவதாகவும் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் இதுபற்றி சர்வதேச இராஜதந்திரிகளுக்கும் தாம் விளக்கமளித்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், எனவே ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரை உரியவாறு கையாள்வதில் தமக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு இருப்பதாகவும் நம்பிக்கை வெளியிட்டார்.